Published : 03 Oct 2024 05:55 AM
Last Updated : 03 Oct 2024 05:55 AM
புதுடெல்லி: தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி டெல்லி விங்யான் பவனில் நேற்றுநடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர்நரேந்திர மோடி கலந்துகொண்டுபேசியதாவது: தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டு நிறைவதையொட்டி `சேவா பக்வாடா' என்ற பெயரில் கடந்த 15 நாட்களில் 27 லட்சம் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. இதில் 28 கோடிபேர் கலந்துகொண்டனர். நாடு வளம் பெறுவதற்கான புதிய பாதையாக மாறியுள்ளது தூய்மை இந்தியா இயக்கம். கோடிக்கணக்கான மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் கலந்துகொண்டு வருவது பெருமிதம் அளிக்கிறது. தூய்மை இந்தியா திட்டம் உங்களால்தான் வெற்றி பெற்றது.
1,000 ஆண்டுகளுக்குப் பிறகு,21-ம் நூற்றாண்டின் இந்தியா வைப் பற்றிய ஆய்வுகள் மேற் கொள்ளப்படும் போது, தூய்மை இந்தியா திட்டம் நிச்சயம் நினைவு கூரப்படும். இந்த நூற்றாண்டில், தூய்மை இந்தியா திட்டம் என்பதுஉலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. தூய்மை இந்தியா பிரசாரம் என்பது தூய்மை இயக்கம் மட்டுமல்ல, செழுமைக்கான புதிய பாதையாகும்.
பொதுமக்கள் தங்கள் வாழ்க்கையை எளிதாக வாழ்வதற்கான வசதிகளைச் செய்து தருவதுதான் ஒரு பிரதமரின் முதல் வேலை. நான் பிரதமராக பதவியேற்றதும் அதைப் பற்றிப் பேசினேன். தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டு கழிப்பறைகள் கட்டிக் கொடுத்தல், சானிட்டரி நாப்கின் உபயோகித்தல் குறித்து வலியுறுத்தினேன். இன்று அந்தத் திட்டத்தின் பலன்களை நாம் இங்கு பார்க்கிறோம். தூய்மைஇந்தியா திட்டம் மூலம் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழித்துவிட்டதால் ஆண்டுதோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் குழந்தைகளின் உயிர்கள் பிழைக்கின்றன என்று யுனிசெப் ஆய்வறிக்கை கூறுகிறது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிடெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் நேற்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து தூய்மைப் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டார். மேலும், இதுதொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் கூறும் போது, "காந்தி ஜெயந்தியான இன்று, எனது இளம் நண்பர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை நான் மேற்கொண்டேன். இன்றைய நாளில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், தூய்மைஇந்தியா திட்டத்தை வலுப்படுத்தவும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT