

புதுடெல்லி: உ.பி. முதல்வர் யோகி தலைமையில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மூடப்பட்ட திரையரங்குகளின் உரிமையாளர்களுடன் உபி அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இவர்களது பிரச்சினைகளை அறிந்து அதற்கேற்றவகையில் உபி அரசு மானியம், வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளை அளிக்க உள்ளது. இந்த திட்டத்தில் உ.பி.யின் மூடப்பட்டவற்றுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திரையரங்குகள் அமையும்படி ஏற்பாடுகள்செய்யப்பட உள்ளன. இவற்றில்ஒரு திரை கொண்டவை மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்களும் அடங்கும்.
இது குறித்து உபியின் நிதியமைச்சரான சுரேஷ் கிருஷ்ணா கூறும்போது, ‘‘திரையரங்குகளை மீண்டும் திறக்கும் எங்களது ஒருங்கிணைந்த திட்டம் சுமார் 50 சதவிகித அடிப்படை செலவுகளை சமாளிக்கும் வகையில் இருக்கும். இந்த திட்டம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அமலாகி இருக்கும்.
இதில் திரையரங்குகள் இடிக்கப்பட்ட நிலத்திலும் நவீனமல்டிபிளக்ஸ்கள் கட்ட ஊக்குவிக்கப்படும். புதிதாகத் திரையரங்குகள் கட்ட முன்வருபவர்களுக்கு இந்த திட்டத்தில் அரசு உதவும். இதற்கு குறைந்தது 75 பேர் அமரும் இருக்கைகள் கொண்டதாக அவை இருக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள திரையரங்குகள் மாற்றி அமைக்கவும் இந்த திட்டத்தில் இடமளிக்கப்பட்டு உள்ளது’’ எனத் தெரிவித்தார்.
மகராஷ்டிராவின் பாலிவுட் திரையுலகை போல், உ.பி.யின்நொய்டாவில் ஒரு பிரம்மாண்டமான ‘பிலிம் சிட்டி’ அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் உபியின் வளர்ச்சிக்காக 25 துறைகளில் பல புதியதிட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மிக அதிகமாக விவசாயத் திட்டங்களுக்கு என ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆறு வருடக் காலத்திற்கான நிதியில், விவசாயிகளுக்கு பயிற்சி,விளைபொருட்களுக்கான சந்தைவிலை கிடைக்க உதவி, விவசாயஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.உபியின் சோன்பத்ரா பகுதி விவசாயிகளுக்கான நீர் மேலாண்மைக் காக ரூ.3,394.65 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் யுவா உத்யாமி விகாஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை அம்மாநில இளைஞர்களுக்கு வட்டியில்லாக் கடன்அளிக்கவும் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. இவற்றை குறித்த காலத்தில் திரும்ப அளித்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கடனும் அதில், 50 சதவிகிதத் தொகை தள்ளுபடியும் அளிக்கப்பட உள்ளன.