பசு கோமியம் அருந்துபவர்களுக்கு மட்டுமே கர்பா நடன அரங்கில் அனுமதி: ம.பி. பாஜக நிர்வாகியின் சர்ச்சைக்குரிய யோசனை

கர்பா நடனம் | கோப்புப் படம்
கர்பா நடனம் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: வட மாநிலங்களில் இன்று முதல் தொடங்கும் நவராத்திரி நாட்களின் இடையே கர்பா எனும் கோலாட்ட நடனங்கள் இடம்பெறுவது வழக்கம். நள்ளிரவு மற்றும் பகலில் சிலமணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் முகம் தெரியாதஇளைஞர்களுடனும் இளம்பெண்கள் நடனமாடுவது உண்டு. இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் இளைஞர்களும் நுழைந்து விடுவதாகப் புகார்கள் எழுகின்றன. இதை தடுக்க ஒவ்வொரு ஆண்டும் புதிய உத்தியை நிகழ்ச்சி நடத்துவோர் கடைபிடிக்கின்றனர். இந்த ஆண்டு அதற்கான சர்ச்சைக்குரிய யோசனையை இந்தூர் ஊரக மாவட்ட பாஜக தலைவர் சின்ட்டு வர்மா அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இந்த வருடம் கர்பா பந்தலுக்கு நுழையும் முன் அளிக்கப்படும் பிரசாதத்தில் மாற்றம் தேவை. இதில் நமது கோமாதா பசுவின் கோமியத்தை உள்ளே நுழையும் அனைவருக்கும் பருகுவதற்காக அளிக்க வேண்டும். இத்துடன் நெற்றியில் திலகம் சந்தனத்துடன் பூசிக்கொள்ள வேண்டும்.

தற்போது ஆதார் அட்டை மூலம்கர்பா பந்தலில் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த அட்டையில் மார்பிங் செய்தும் பெயர்களை மாற்றலாம். எனவே பசுவின் கோமியத்தை பருக அளிப்பது, நமக்குகர்பா பந்தலில் பாதுகாப்பை அளிக்கும். இதைப் பருகாதவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது’’ என்றார்.

பாஜக தலைவரின் இந்த அறிவிப்பை காங்கிரஸின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான உஷா தாக்கூர் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘சனாதனத்தின் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல யோசனை. கோமியத்தை பருகுவதன் மூலம் நமது நோய்கள் நீங்கி உடலும், குடியிருப்பும் சுத்தமாகி விடுகிறது. சாங்கியத்தின்படி 21 துணிகளால் வடிகட்டிய கோமியம் இருப்பது நல்லது’’ என்றார்.

இந்த கர்பா நடனம் குஜராத்தில் மட்டும் நடைபெற்று வந்தது. இது பாலிவுட் திரைப்படங்களிலும் இடம்பெறுவதன் தாக்கமாக பிற மாநிலங்களுக்கும் பரவி விட்டது. கர்பா நடனத்திற்கு செல்லும் பெண்களை இளைஞர்கள் கவர முயற்சிப்பது உண்டு. இதை தடுக்க அப்பெண்களின் பெற்றோர்கள் தனியார் உளவு நிறுவனங்களை நாடுவதும் உண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in