

இலங்கை அரசின் இணைய தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து வெளியான அவதூறு கட்டுரை தொடர்பாக நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை கடும் அமளி நிலவியதை தொடர்ந்து, இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
டெல்லியில் உள்ள இலங்கை தூதர் சுதர்ஷன் சேனேவிரத்னே வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டார். அவரிடம் வெளியுறவுத் துறையின் இலங்கை விவகாரங்களுக்கான இணைச் செயலாளர், இந்த கட்டுரை தொடர்பாக இந்தியாவின் கடும் கண்டனத்தையும் ஆட்சேபத்தையும் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோபம், அதிருப்தியை அவர் எடுத்துக் கூறினார்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் அவையின் அதிமுக தலைவர் மைத்ரேயன் எழுப்பிய பிரச்சினைக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதில் அளிக்கும்போது, “இந்த விவகாரத்தில் மத்திய அரசு மிக உறுதியாக நடந்துகொண்டு இலங்கையை கண்டிக்கும். இலங்கை தூதரை நேரில் அழைத்து விளக்கம் அளிக்குமாறு கோருவோம்” என்று உறுதி அளித்தார். எனினும் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையிலும் அமளி
மக்களவையில் கேள்வி நேரம் முடிந்ததும் இந்தப் பிரச்சினையை அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை எழுப்பினார். அவர் பேசும்போது, “இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நமது பிரதமரையும், தமிழக முதல்வரையும் அவதூறாக சித்தரித்து எழுதியது கண்டனத்துக்குரியது. கச்சத்தீவை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்ட கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கச்சத் தீவை திரும்பப் பெறுவது மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக அமையும். இலங்கை செய்த அவதூறுக்கு தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு இதுவரை அறிக்கை அளிக்கவில்லை.
இலங்கையின் மக்கள்தொகை 2.5 கோடி. தமிழகத்தின் மக்கள்தொகையோ 7 கோடி. 7 கோடி மக்களுக்கு ஆதரவாகத்தான் மத்திய அரசு முடிவு எடுக்கவேண்டும். இந்த அவதூறை கண்டிக்கும் வகையில் உறுதியான, ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இது, எதிர்காலத்தில் யாரும் அவ்வாறு செய்யக்கூடாத வகையில் இருக்க வேண்டும்” என்றார்.
நீதி வேண்டும்
இவரது பேச்சுக்கிடையே அதிமுக உறுப்பினர்கள், “ராஜபக்ச ஒழிக! எங்களுக்கு நீதி வேண்டும்!” எனக் கோஷமிட்டு அமளி செய்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, “அதிமுக உறுப்பினர் எழுப்பிய பிரச்சினையை ஆழ்ந்த கவனத்துடன் அரசு எடுத்துக்கொண் டுள்ளது. இந்தப் பிரச்சினை இரு நாடுகளின் ராஜ்ஜிய உறவுகளுக்கு உட்பட்டது. எனினும், இதை கண்டிப்பதில் எந்த தயக்கமும் இருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் வேறு என்ன செய்யமுடியும் என ஆராயுமாறு வெளியுறத்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொள்வேன்” என்றார்.