

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் நடுவே ராம்நிவாஸ் தோட்டம் அமைந்துள்ளது. மகாராஜா சவாய் ராம் சிங் என்பவரால் 1868-ல் உருவாக்கப்பட்டது. இந்த வளாகத்தில் ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இவற்றை பார்வையிடுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த இரண்டு இடங்களிலும் சமீப காலமாக எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது. இதையடுத்து, எலிகளைப் பிடிப்பதற்காக இந்த 2 இடங்களையும் 2 நாட்களுக்கு மூட ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணையம் (ஜேடிஏ) முடிவு செய்துள்ளது. இதன்படி நேற்றும் இன்றும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜேடிஏ செயலாளர் நிஷாந்த் ஜெயின் கூறும்போது, “ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம் உள்ளிட்ட கட்டிடங்கள் அடங்கிய ராம்நிவாஸ் தோட்டத்தில் சமீப காலமாக எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது. இவை ஆங்காங்கே வலைகளை தோண்டுவதுடன் தோட்டத்தின் பசுமை அழகை அழித்து வருகின்றன. மேலும் ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதுமட்டுமல்லாமல் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றை வேட்டையாட திட்டமிட்டுள்ளோம். இதற்காக, ஆங்காங்கே எலிப்பொறிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த உணவுப் பொருட்களையும் வைத்துள்ளோம். இதனால் எலிகள் எளிதில் தப்ப முடியாது” என்றார்.