பயிற்சி மருத்துவர் வழக்கு விசாரணைக்கு வரும் சூழலில் மே.வங்க மருத்துவர்கள் பேரணி

பயிற்சி மருத்துவர் வழக்கு விசாரணைக்கு வரும் சூழலில் மே.வங்க மருத்துவர்கள் பேரணி
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் சூழலில் மே.வங்க மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு மே.வங்க அரசு மருத்துவமனைகளின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள், பொதுமக்கள் இணைந்து பல இடங்களிலும் மெழுவர்த்தி ஊர்வலம் நடத்தினர்.

ஆர்ஜி கர் மருத்துவமனை, சாகோர் தத்தா மருத்துவமனை, எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை, கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இளநிலை பயிற்சி மருத்துவர்கள் பேரணில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியை மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் முன்னணி ஒருங்கிணைத்தது.

பேரணியில் பங்கேற்றவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல், அதற்கான பிரதிநிதிகளை முறையாக தேர்வு செய்தல், பணிக்குழு அமைத்தல் என பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாகோர் தத்தா மருத்துவமனையில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

முன்னதாக, 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திய பயிற்சி மருத்துவர்கள் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி தான் பணிக்கு திரும்பினர். எனினும் தங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பேரணி நடத்தியுள்ளனர். கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்குத் தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் முந்தைய நாள் நடத்தப்பட்ட இந்தப் பேரணி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சம்பவமும், விசாரணையும்.. கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில், கடந்தஆகஸ்ட் 9-ம் தேதி பெண் பயிற்சிமருத்துவர் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக, காவல் துறையுடன் இணைந்து பணியாற்றி வந்த தன்னார்வலர் சஞ்சய் ராயை (33) காவல் துறை கைது செய்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ்,காவல் துறை அதிகாரி அபிஜித்மண்டல் ஆகிய இருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது. இதனிடையே இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in