

புனேவைச் சேர்ந்த தலித் ஆர்வலரும் பாடகருமான ஷீதல் சதே, செயின்ட் சேவியர் கல்லூரி ஆண்டு விழாவுக்கு அழைக்கப்பட்டதை எதிர்த்து, அகில பாரதிய வித்யார்த்தி பர்ஷத் (Akhil Bharatiya Vidyarthi Parishad - ABVP) அக்கல்லூரிக்கு மிரட்டல் விடுத்தது.
இதனையடுத்து, அந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஷீதல் சதேவிடம் தெரிவித்தனர்.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், நக்ஸல் அமைப்புக்கு ஆதரவு அளித்ததாக ஷீதல் சதே கைதுசெய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
செயின்ட் சேவியர் கல்லூரியின் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, ‘சாதியின் மறைமுகமான முகம்’ (The Invisibility of Caste) என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று பேச, ஷீதல் சதேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், அவர் பங்கேற்றால் ஆண்டு விழாவை நடத்த விடமாட்டோம் என்று ஏ.பி.வி.பி அமைப்பு மிரட்டல் விடுத்ததையடுத்து, ஒருங்கிணைப்பாளர்கள் ஷீதல் சதேவிடம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவித்து, அழைப்பை ரத்து செய்துவிட்டனர்.
அந்த அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் சில நாட்களுக்கு முன், அக்கல்லூரிக்குச் சென்று, நிர்வாகிகளிடம் சதேவுக்கு விடுத்த அழைப்பை திரும்பப் பெற வேண்டும் என்று எச்சரித்தனர்.
இதுகுறித்து, அந்த அமைப்பின் மும்பை செயலர் யதுநாத் தேஷ்பாண்டே கூறுகையில், “ஷீதல் சதே, இந்தத் தேசத்திற்கு எதிராகச் செயல்படுபவர். அத்தகைய மனிதர்களை நாம் அனுமதித்தால், இளைஞர்களை மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடுவார்கள். ஒருவேளை மீறி அனுமதித்தால், இந்தக் கலைநிகழ்ச்சி நிறுத்தவேண்டியிருக்கும். ” என்று தெரிவித்தார்.
சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்து கலைநிகழ்ச்சிகள் நடத்தும் 'கபீர் கலா மஞ்ச்' என்ற கலைக்குழுவைச் சேர்ந்தவர் ஷீதல் சதே என்பது குறிப்பிடத்தக்கது.