புரி ஜெகந்நாதர் கோயிலில் அமெரிக்க தூதர் வழிபாடு
புரி: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம் புரி நகருக்கு சென்றிருந்தார். அங்குள்ள ஜெகந்நாதர் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற அவர் வழிபாடு செய்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஒரு யாத்ரீகராக, ஒரு சுற்றுலாப் பயணியாக வருவதற்கு இது அழகான இடம். இந்த இடத்தின் சக்தியை என்னால் உணர முடிகிறது. இந்த இடத்தின் அழகை என்னால் பார்க்க முடிகிறது. இதை என் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலக நாகரீகத்துக்கு இந்தியா வழங்கிய பங்களிப்பை புரிந்து கொள்ள நான் முயற்சிக்கிறேன்” என்றார்.
மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “வங்காள விரிகுடா கடற்கரை ஓரம் அமைந்துள்ள சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான, அதிசயமான புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு சென்றேன். இரவு நேரத்தில் கொடியை மாற்றுவதற்காக 65 மீட்டர் உயரம் கொண்ட கோபுரத்தின் உச்சிக்கு அர்ச்சகர்கள் ஏறுவதைப் பார்க்க உண்மையிலேயே பிரம்மிப்பாக இருந்தது. துர்கா பூஜைக்கு தயாராகும் கலைஞர்களைக் கொண்ட புரி நகர தெருக்கள், நம்ப முடியாத இந்தியாவின் துடிப்பான உணர்வைப் படம்பிடித்து காட்டுகின்றன. இந்த நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது” என பதிவிட்டுள்ளார். இந்துக்கள் தங்கள் வாழ்நாளில் தரிசிக்க வேண்டிய 4 முக்கிய கோயில்களில் ஒன்றாக இந்த கோயில் விளங்குகிறது.
