

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உள்ள34 அமைச்சர்களில் ஆர்.ராஜேந்திரன் மற்றும் கோவி.செழியன் ஆகிய இருவரும் புதியவர்களாவர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 34 பேர் இடம்பெறலாம். முன்னதாக முதல்வர் மற்றும் 33 அமைச்சர்கள் இருந்தனர். இந்நிலையில், தற்போதைய 5-வது அமைச்சரவை மாற்றத்தில் 3 பேர் நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் 2 பேர்,புதியவர்கள் 2 பேர் என 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், அமைச்சர்கள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. புதியவர்களில் ஒருவரானகோவி.செழியன், திருவிடைமருதூர் தொகுதியில் கடந்த 2011, 2016 மற்றும் 2021 என 3 முறை திமுக சார்பில் போட்டியிட்டு தேர்வானவர். இவருக்கு வயது 57. தஞ்சை மாவட்டம் கும்பகோணம்அருகிலுள்ள திருவிடைமரு தூருக்கு உட்பட்ட ராஜாங்கநல்லூர் இவரது சொந்த ஊர். தற்போதைய சட்டப்பேரவையில், அரசு கொறடாவாக கோவி.செழியன் நியமிக்கப்பட்டிருந்தார். இளங்கலைபட்டம் மற்றும் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் மற்றும் முதுகலை சமூகவியல் பட்டங்கள் பெற்றுள்ளதுடன், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், திமுகவின் தலைமைநிலைய பேச்சாளர், மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் பொறுப்புகளை வகித்து வருகிறார். இவருக்கு உமாதேவி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். மற்றொரு புதிய அமைச்சரான ஆர்.ராஜேந்திரன், சேலம் வடக்கு தொகுதியில் திமுக சார்பில் பாட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2016, 2021-ம் ஆண்டுசட்டப்பேரவை தேர்தல்களில் சேலம் வடக்கு தொகுதியிலிருந்தும், 2006-ம் ஆண்டு பனைமரத்துப் பட்டி தொகுதியில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். பிஏபிஎல் பட்டம் பெற்ற ராஜேந்திரன், வழக்கறிஞராக பணியாற்றினார்.
திமுகவில் சேலம் மத்திய மாவட்ட செயலாளராக உள்ளார். இவருக்கு சுசீலா என்ற மனைவியும் கார்த்திகா என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் அமைச்சராகி யுள்ள வி.செந்தில்பாலாஜி, நாசர் ஆகியோர் கடந்த 2021-ம்ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றபோது அமைச்சர்களாக இருந்தனர். இதில், வி.செந்தில்பாலாஜி 2021 தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர். முந்தைய தேர்தலில் அரவக்குறிச்சியில் இருந்து தேர்வாகியிருந்தார். அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டதால் கடந்தாண்டு அமைச்சர் பதவியை இழந்தார். 471 நாட்கள் சிறையில் இருந்த அவர், கடந்த சில தினங்கள் முன்னதாக ஜாமீனில் வெளிவந்த நிலையில் தற்போது அமைச்சராகியுள்ளார். மற்றொருவரான ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர், பால்வளத்துறை அமைச்சராக இருந்து கடந்தாண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது மீண்டும் அமைச்சராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.