மேடையில் மயங்கி சரிந்த கார்கே: தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி

மேடையில் மயங்கி சரிந்த கார்கே: தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டார். மேடையில் பேசிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. லேசாக சரிந்த அவரை மேடையில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஓடிவந்து தாங்கிப் பிடித்தனர். பின்னர் அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தனர்.

சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பேசிய கார்கே, “அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட மாட்டேன். மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் வரை நான் உயிரோடு இருப்பேன். நான் உங்களுக்காக போராடுவேன்” என்று ஆவேசமாக பேசினார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க், “ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஜஸ்ரோட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்துள்ளனர். குறைந்த ரத்த அழுத்தமே தவிர, அவர் நலமாக உள்ளார். அவரது உறுதியும், மக்களின் நன்மதிப்பும் அவரை வலுவாக வைத்திருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

கார்கே மேடையில் மயங்கிச் சரிந்த செய்தியை அறிந்த பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக அவரை தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in