

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தலை மையமாக வைத்து, ராணி முகர்ஜி நடித்து வெளியாகி உள்ள 'மர்தானி' படத்திற்கு மகாராஷ்டிர மாநில அரசு வரி விலக்கு அளித்துள்ளது.
அம்மாநில முதல்வர் பிரித்திவி ராஜ் சவுகான் இது குறித்த அறிவிப்பை, தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் உலக அளவில் வெளியான 'மர்தானி' படம் பெரும் தரப்பினரது வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை தான், குடும்பத்தினருடன் பார்த்ததாகவும், இந்த படம் பெண்கள் மீதான வன்கொடுமைகள் சமுதாயத்திலிருந்து ஒழிக்க கூடியவை என்று உணர்த்தக்கூடிய வகையில் உள்ளதாகவும் சவுகான் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், இந்த படத்திற்கு மகாராஷ்டிர மாநிலத்தில் வரி விலக்கு அளிப்பதாக தனது அறிவிப்பில் பிரித்திவி ராஜ் சவுகான் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்திரைப்படத்தை தயாரித்துள்ள ஆதித்யா சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்த சவுகான், கதையில் பொறுந்தி அற்புதமான தனது நடிப்புத் திறனை நடிகை ராணி முகர்ஜி வெளிப்படுத்தியது பாராட்டத்தக்கது என்று கூறி உள்ளார்.