பாஜகவால் டெல்லியில் முடக்கப்பட்ட பொது நலப்பணிகள் மீண்டும் தொடங்கப்படும்: அர்விந்த் கேஜ்ரிவால் உறுதி

பாஜகவால் டெல்லியில் முடக்கப்பட்ட பொது நலப்பணிகள் மீண்டும் தொடங்கப்படும்: அர்விந்த் கேஜ்ரிவால் உறுதி
Updated on
1 min read

இந்நிலையில் வரும் 2025 பிப்ரவரியில் டெல்லியில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களிடம், ‘நேர்மைக்கான சான்றிதழ்’ பெற்று மீண்டும் பதவியில் அமர்வதாக சபதம் எடுத்து, முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் ஆதிஷி பொறுப்பேற்றார். இதனையொட்டி அர்விந்த் கேஜ்ரிவால் ஆதிஷியுடன் இணைந்து டெல்லி நகரின் சாலைகளை நேற்று பார்வையிட்டார். மூத்த ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா, எம்எல்ஏ திலீப் பான்டே உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதுகுறித்து அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:

நான் திரும்ப வந்துவிட்டேன் என்பதையும் முடக்கி வைக்கப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்பதையும் டெல்லி மக்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன். அவர்களின் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்படும். நாள் முழுவதும் பம்பரம் போல் சுழன்று செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதும் நான் துடிப்புடன்தான் இருந்தேன்.

சில தினங்களுக்கு முன்பு அவர்களின் (பாஜக) பெரிய தலைவரை சந்தித்துப் பேசினேன். என்னை கைது செய்ததால் உங்களுக்கு என்ன கிடைத்துவிட்டது என்று அவரிடம் கேட்டேன். குறைந்தபட்சம் டெல்லி அரசை தடம்புரளச் செய்து நகரத்தை ஸ்தம்பிக்க வைத்தோம் இல்லையா என்று அதற்கு அவர் அளித்த பதில் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தி சோகத்தில் மூழ்கடித்தது. அவர்களது நோக்கம் ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கி டெல்லியில் நடைபெறும் பணிகளை முடக்குவதுதான். ஆனால், மக்களின் பணிகள் தடைப்பட ஒருபோதும் ஆம் ஆத்மி அரசு அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

கேஜ்ரிவாலுக்கு இருக்கை எண் 41: டெல்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இருக்கை எண் 41 ஒதுக்கப்பட்டது. முதல்வராக இருக்கை எண் 1-ல் அமர்ந்தவர் அந்த பதவியை ராஜினாமா செய்த பிறகு தற்போது இருக்கை எண் 41-க்கு மாற்றப்பட்டுள்ளார். முதல்வர் பதவியை ஏற்றுள்ள ஆதிஷிக்கு இருக்கை எண் 1-ம், மூத்த ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு இருக்கை எண் 40-ம் ஒதுக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வராக ஆதிஷி கடந்த செப் 23-ம் தேதி பொறுப்பேற்றார். இதையடுத்து, டெல்லி முதல்வர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்டு, அருகில் வேறொரு நாற்காலியில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in