Published : 26 Sep 2024 03:08 PM
Last Updated : 26 Sep 2024 03:08 PM

“காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தை கொண்டு வர காங்கிரஸ் விரும்புகிறது” - அமித் ஷா

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தைக் கொண்டு வர காங்கிரஸ் கட்சியும் தேசிய மாநாட்டுக் கட்சியும் விரும்புவதாக அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு செனானியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர், “ஜம்மு காஷ்மீரின் இந்த தேர்தல், இங்கு மூன்று குடும்பங்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல். சுதந்திரத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவோ அல்லது தனிக் கொடியோ இல்லாத நிலையில் இந்தத் தேர்தல் நடக்கிறது.

'இரண்டு சட்டங்கள், இரண்டு சின்னங்கள், இரண்டு தலைமைகள்' ஒரு நாட்டில் வேலை செய்யாது என்று ஜனசங்கத் தலைவர் ஷியாம பிரசாத் முகர்ஜி கூறியிருந்தார். அதற்காகத் தன் உயிரையும் அவர் தியாகம் செய்தார். ஆகஸ்ட் 5, 2019 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்தார்.

தேசிய மாநாட்டுக் கட்சியும், ராகுல் காந்தியும் 370வது பிரிவை மீட்டெடுப்போம் என்று கூறுகின்றனர். இன்று இந்த மேடையில் இருந்து நான் அதை அறிவிக்கிறேன், இந்த கிரகத்தில் எந்த சக்தியாலும் 370 வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது. சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய மோடி அரசு முடிவு செய்ததிலிருந்து, காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. பயங்கரவாதம் மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் கணிசமாக குறைந்துள்ளன.

ஜம்மு-காஷ்மீர் 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் கீழ் இருந்து வந்தது. 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 3,000 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாகிஸ்தானால் தூண்டப்பட்ட பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு நாளும் குண்டுகள் வைப்பதும், தோட்டாக்களால் சுடுவதும் வழக்கமாக இருந்தது. மோடியின் அரசாங்கம் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டது. இப்போது கல்லெறிதலும் இல்லை, துப்பாக்கிச்சூடும் இல்லை.

ஆனால், ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தை கொண்டு வர காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் விரும்புகின்றன. அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன், பயங்கரவாதத்தை பாதாள உலகத்தின் ஆழத்தில் புதைத்துவிட்டுதான் நாங்கள் சாவோம். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை மீண்டும் கொண்டு வரும் சக்தி யாருக்கும் இல்லை. ஜம்மு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.

அப்துல்லா குடும்பம், முப்தி குடும்பம் மற்றும் நேரு-காந்தி குடும்பம் ஆகியவை ஜம்மு காஷ்மீரில் 70 ஆண்டுகளாக ஜனநாயகத்தை அழித்தன. தற்போது, ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு 40,000 மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனநாயகத்தின் பலன்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இப்போது உங்கள் கிராமங்களில் பஞ்சாயத்துத் தலைவர் இருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் ஜனநாயகத்தை கொண்டாடுகின்றனர். இப்போது, ​​மோடியின் முயற்சியால், ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றத்திற்கு இங்குள்ள இளைஞர்கள் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x