

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் சிராவண மாதத்தில் ஆண்டுதோறும் கன்வர் யாத்திரைசெல்லும் வழித் தடங்களில் உள்ளஉணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர்அடங்கிய பலகையை வாடிக்கையாளர் கண்ணில்படும்படி வைக்க வேண்டும், சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச பாஜக அரசு உத்தரவிட்டது.
இது, முஸ்லிம் வியாபாரிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கை என விமர்சனங்கள் எழுந்தன. உ.பி. அரசின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், உ.பி. பாஜக அரசை போலவே, இமாச்சல பிரதேசத்தின் காங்கிரஸ் அரசும் உணவகங்களில் பெயர் பலகை திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இமாச்சல பிரதேச நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங் கூறுகையில், "சுகாதாரமான உணவு விநியோகத்தை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் அடிப்படை நோக்கம். உணவுக் கடைகளில் உணவு கிடைப்பது குறித்த மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காகவே நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக மும், மாநகராட்சியும் இணைந்து கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளன’’ என்றார்.