

கர்நாடக மாநிலம் ஹூப்ளி தாலுகாவில் உள்ள கொலிவாடு என்ற கிராமத்தில் உள்ள முடிதிருத்தும் நிலையங்கள் ஒருமாதமாக மூடப்பட்டுள்ளது.
காரணம், சலூன்களில் தலித் பிரிவினருக்கு முடிவெட்டக்கூடாது என்று மேல்சாதிக்காரர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனராம்.
இந்த கிராமத்தில் அம்பேத்கார் நகரில் சுமார் 100 தலித் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தலித் இளைஞர்கள் பலர் சலூனில் முடிவெட்டிக்கொள்ள வருவதால் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளதாக கிராம அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேல் சாதிக்காரர்களுக்கு மட்டும் சலூனில் முடிவெட்டுகின்றனர். தலித் மக்கள் சிலர் சலூனுக்கு வருவதையடுத்து மேல் சாதிக்காரர்களுக்குப் பயந்து சலூன்களையே மூடிவிட்டனர் சவிதா என்ற அந்த முடிவெட்டும் சமூகத்தினர்.
முடிவெட்டும் விவகாரத்தினால் கிராமத்தில் சாதிக்கலவரம் வெடித்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் சலூன்களைத் திறக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
கலவரத்திற்கு அஞ்சி முடிவெட்டும் பிரிவினர் விவசாயத் தொழிலுக்கு சென்று விட்டனர் என்று ஹூபிளி தாசில்தார் எச்.டி.நகவி இந்து ஆங்கில நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.
இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசிய பிறகே அங்கு முடிவெட்டும் நிலையங்கள் இயங்கத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.