

உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகரில் உள்ள ஜாட் காலனியில், ஒரு சமூகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்த 4 மாணவர்களும் ஜாட் காலனியில் டியூஷன் வகுப்புக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றனர். அப்போது பெண்களை கேலி செய்ததாக கூறி இவர்களை பலர் தாக்கியுள்ளனர். பின்னர் இம்மாணவர்களை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாண வர்களை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இங்குள்ள காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக போலீஸார் 150 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் மூவரின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார் நிருபர்களிடம் சனிக்கிழமை கூறும்போது, “இந்த சம்பவம் தொடர்பாக முசாபர்நகர், மீனாட்சி சவுக் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பலர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
முசாபர்நகரில் வன்முறை ஆபத்துள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
மேற்கு உ.பி.யில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட வகுப்பு கலவரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்ச மடைந்தனர்.