காஷ்மீர் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் இந்து அகதிகள்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசித்த இந்துக்கள் அகதிகளாக ஜம்முவில் அடைக்கலம் அடைந்தனர். கடந்த 1960-ம் ஆண்டில் ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 39 முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் 370-வது சட்டப்பிரிவின் காரணமாக அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டனர்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டில் 370-வது சட்டப்பிரிவை ரத்துசெய்தது. இதன் காரணமாக இந்துஅகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்தது. தற்போதையகாஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.

இதுகுறித்து மேற்கு பாகிஸ்தான் அகதிகள் செயல் குழுவின் நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 1947-ம் ஆண்டு சுமார் 5,700-க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஜம்முவில் அகதிகளாக குடியேறினர். பல்வேறு குடும்பங்கள் பஞ்சாப், டெல்லி மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குடியேறின.

பெரும்பாலான குடும்பங்கள் ஜம்முவின் கதுவா, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் தங்கிவிட்டன. காஷ்மீரில் தங்கியதால் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்குரிமை உள்ளிட்ட எவ்வித அடிப்படை உரிமைகளும் இன்றி வாழ்ந்தோம். கடந்த 2019-ம் ஆண்டு370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகே அரசின் அனைத்து நலத்திட்டங்களும் எங்களுக்கும் கிடைத்தன.

அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ள காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக நாங்கள் வாக்களிக்க உள்ளோம். இதை மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடி வருகிறோம். எங்களுக்கு வாழ்வளித்த பிரதமர் மோடிக்கு மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேஷ்ராஜ் என்பர் கூறும்போது, “370-வது சட்டப்பிரிவால் நாங்கள்பல்வேறு இன்னல்களை சந்தித்தோம். அந்த சட்டப்பிரிவால் 2-ம் தர குடிமக்களாக நடத்தப்பட்டோம். வீட்டு வசதி, வங்கிக் கடன் உள்ளிட்ட எந்த உரிமையும் எங்களுக்குகிடைக்கவில்லை. 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகே அனைத்துஉரிமைகளும் எங்களுக்கு கிடைத்தன. இப்போது வாக்குரிமையும் கிடைத்திருக்கிறது. இது எங்கள் வாழ்வில் மறக்க முடியாத தருணம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in