

நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய வீரரை விடுவிப்பது குறித்து ஆலோசிக்க, கொடி அமர்வுக்கு வருமாறு பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய எல்லை பாதுகாப்புப் படை அழைத்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே செனாப் நதியில், ரோந்துப் பணியில் இருந்த ராணுவ வீரர் சத்யஷீல் யாதவ், செனாப் நதியில் அடித்துச் செல்லப்பட்டார். இவருடன் படகில் சென்ற மற்ற 3 வீரர்கள் நதியில் நீந்தி பாதுகாப்பாக தப்பித்தனர்.
ஆனால் நதியில் அடித்து செல்லப்பட்ட சத்யஷீல், பாகிஸ்தானின் சியால்கோட்டிற்கு 400 கி.மீ அருகே கரைசேர்ந்தார். பாகிஸ்தான் எல்லையை அடைந்த அவரை அந்நாட்டு ராணுவம் பிடித்து சென்றது.
இந்த நிலையில், "பாகிஸ்தான் ராணுவத்தால் சத்யஷீல் பிடித்து செல்லப்பட்டது உறுதியாகி உள்ளது. அவரை மீட்பது குறித்து ராணுவ ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முதற்கட்ட நடவடிக்கையாக, பாகிஸ்தான் ராணுவத்துடன் கொடி அமர்வு பேச்சு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்று இந்திய எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.