Published : 02 Jun 2018 03:57 PM
Last Updated : 02 Jun 2018 03:57 PM

மனைவியின் கொடுமையில் இருந்து ஆண்களைக் காக்க ‘புருஷ் கமிஷன்’: ஆந்திர மகளிர் ஆணையத் தலைவர் வலியுறுத்தல்

மனைவியின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் ஆண்களின் உரிமைகளைக் காக்க புருஷ் கமிஷன் என்று தனியாக உருவாக்க வேண்டும் என்று ஆந்திர மாநிலத்தின் மகளிர் ஆணையத் தலைவர் நன்னாபனேனி ராஜகுமாரி வலியுறுத்தியுள்ளார்.

ஆண்களின் கொடுமை, குடும்ப வன்முறை ஆகியவற்றில் இருந்து பெண்களைக் காக்க மகளிர் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுகிறது. அதேசமயம், மனைவியின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் ஆண்களைக் காக்கவும், அவர்களின் மனக்குறையைக் கேட்டு, அவர்களின் பிரச்சினையைத் தீர்க்கவும் தனியாக எந்த ஆணையமும், அமைப்பும் இல்லை.

இது குறித்து ஆந்திரப் பிரதேச மகளிர் ஆணையத்தின் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான நன்னாபனேனி ராஜகுமாரியிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது அவர் கூறியதாவது:

''நாட்டில் தற்போது நிலவும் சூழல்படி, பெண்களின் கொடுமையைக் களைய தனியாக ஆணையம் இருப்பதுபோல், ஆண்களைக் கொடுமைப்படுத்தும் பெண்களிடம் இருந்து அவர்களைக் காக்க தனி ஆணையம் அவசியம்.

ஆந்திர மாநிலத்தில் நாள்தோறும், ஏராளமான வன்முறைகள், கொலைகளில், ஆண்களைக் கொலை செய்யும் மனைவிகள் குறித்த சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வேதனைக்குள்ளாக்குகின்றன. பெண்களின் கொடுமையில் இருந்து ஆண்களைக் காக்க தனியாக ஆணையம் தேவை. இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேச இருக்கிறேன்.

ஆண்கள் மீது மனைவிகள் நிகழ்த்தும் கொடுமைக்கு அதிகரித்துவரும் டிவி சீரியல்களே காரணம் என கருதுகிறேன். தொலைக்காட்சிகளில் வரும் நாடகங்கள் பெண்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்களைப் புகுத்திவிடுகின்றன. இதுபோன்ற நாடகங்கள் பெண்களின் மனதில் ஆண்கள் குறித்த தவறான எண்ணத்தையும், சமூகத்திலும் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சீரியல்களைப் பார்க்கும் பெண்கள், திட்டமிட்டு தங்கள் கணவனைக் கொலை செய்கிறார்கள், சமுதாயத்துக்கு பெரிய எதிர்மறையான விளைவுகளை இந்த சீரியல்கள் ஏற்படுத்துகின்றன.

ஆனால், ஆண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து நடந்துவந்தால், மகளிர் ஆணையமே நடவடிக்கை எடுத்து ஆண்களைக் காக்க வேண்டிய நிலை ஏற்படும். சமீபத்தில் சிறீகாகுளம், விஜயநகரம், குண்டூர் போன்ற நகரங்களில் இளம் பெண்கள், தங்கள் கணவனைக் கொலை செய்துள்ளனர். இதுபோன்ற சூழலில் பெண்களை அண்டை வீட்டாரும், குடும்ப உறுப்பினர்களும் கண்காணிப்பது அவசியம். இதுபோன்ற கிரிமினல் மனப்பான்மை பெண்களுக்கு இருந்தால், சமூகம் சீரழிந்துவிடும்.

நான் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தொடர்ந்து எதிர்க்கிறேன். ஒரு பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் போது, அவள் தன்னைக் காக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தலாம். அதேசமயம், கணவனை ஏமாற்றிவிட்டு வேறுஒரு ஆணுடன் தவறான தொடர்பு வைக்கும் பெண்களையும், அதனால் பாதிக்கப்படும் ஆண்களையும் நினைத்துப் பரிதாபமாக இருக்கிறது. அப்படிப்பட்ட நேரத்தில் நான் ஆண்களுக்கு ஆதரவாக இருந்து, அவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுப்பேன்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு நான் எழுதிய கடிதத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் எதிர்மறையான சிந்தனைகளைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்ற விதிகளைக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால், திரைப்படத்துக்கு மட்டுமே தணிக்கை வாரியம் இருக்கிறது, தொலைக்காட்சி சீரியல்களுக்கு இல்லை என்று அவர் பதில் அளித்தார். ஆண்களுக்காகத் தனி ஆணையம் அமைக்க மீண்டும் குரல் கொடுப்பேன்.''

இவ்வாறு ராஜகுமாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x