

பிரதமர் நரேந்திர மோடி அமைச் சரவையில் ‘நம்பர்-2’ யார் என்ற சர்ச்சை மீண்டும் தொடங்கி இருப்ப தாகக் கருதப்படுகிறது. இதை யொட்டி, உ.பி மாநில பொதுச் செயலாளர் பங்கஜ் சிங் மீது கிளம்பிய புகார்களுக்கு அவரது தந்தையான மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் அலுவலகம் சார்பில் புதன்கிழமை கடுமையான மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களாகவே சில ஆங்கில நாளிதழ்களில் ராஜ் நாத்தின் மகன் பங்கஜ் சிங் பற்றி பல்வேறு வகையான புகார்கள் உலவுவதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதில், தம் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறை அதிகாரிகளை பணி அமர்த்தல், இடமாற்றம் உட்பட பல அரசு வேலைகளுக்காக பங்கஜ் சிங் பணம் பெறுவதாகவும், இதற்காக அவரை நேரில் அழைத்து மோடி கண்டித்ததாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த காரணத்திற்காக பங்கஜுக்கு உ.பி.யில் செப்டம்பர் 13-ல் நடைபெறவிருக்கும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் வெளியாகி இருந்தது.
ராஜ்நாத்தின் மறுப்பு
இதை கடுமையாக கண்டிக்கும் வகையில் மறுப்பு தெரிவித்து ராஜ்நாத் கூறும்போது, ‘கடந்த 15, 20 நாட்களாக என் மீதும் எனது குடும்பத்தார் மீது ஆதார மற்றப் பல புகார்கள் வெளியாகி வருகின்றன.
இவற்றில் ஒன்றாவது நிரூபிக்கப்பட்டால், நான் அரசி யலில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன். இது குறித்து பிரதமர் மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவிடம் எனது ஊகத்தை வெளிப்படுத்திய போது அவர்கள் அதிர்ச்சியுடன் நம்ப மறுத்தனர்.’ எனத் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் தாம் பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர்களை சந்திக்கவில்லை என மறுத்த ராஜ்நாத், இந்தப் புகார்களை கிளப்புவது யார் எனவும் சொல்ல மறுத்து விட்டார். பங்கஜ் சிங் மீதான புகார்களை பிரதமர் அலுவலகமும் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரதமரின் மறுப்பு
இது குறித்து இணையதளத்தின் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் அலுவலகம் கூறும்போது, ‘தூண் டும் நோக்கம் கொண்ட இந்த செய்திகள் வெறும் பொய்யானவை மற்றும் அரசு மீதான செல்வாக் கிற்கு களங்கம் சுமத்தி, பெய ரைக் கெடுக்கும் முயற்சி. இது போன்ற விஷயங்களில் ஈடுபடுபவர் கள் நாட்டின் நலனுக்கு கேடு விளை விப்பவர்கள்.’ என ராஜ்நாத்திற்கு ஆதரவாகக் குறிப்பிட்டுள்ளது.
கிளப்புவது யார்?
இந்த பிரச்சினை, மோடி அமைச் சரவையில் அவருக்கு அடுத்த படியான அந்தஸ்தில் இருக்கும் ராஜ்நாத்தை அதில் இருந்து கீழிருக்கும் முயற்சியாகக் கருதப் படுகிறது. இதை கிளப்புவது யார் என்பது வெளிப்படையாக கூறப்படாவிட்டாலும் அது, அரசு மற்றும் பாஜக வட்டாரத்தில் தெரிந்த விஷயம்தான் எனக் கூறப் படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜக நிர்வாகிகள் வட்டாரம் கூறும் போது, “பிரதமர் பிரிக்ஸ் மாநாட்டிற் காக வெளிநாடு சென்றிருக்கும் போது, ’பொறுப்பு’ பிரதமர் யார் என்பதில் சர்ச்சை கிளம்பியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரதமர் தனது கேபினேட் செயலாளருக்கு, தாம் இல்லாத சமயங்களில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கியக் கூட்டங்களுக்கு தலைமை வகிப் பார் என எழுதியிருந்தார்.’ எனக் கூறினர்.
மேலும், பதவி ஏற்பு, நாடாளு மன்ற மக்களவையில் துணைத் தலைவர் உட்பட பல விஷயங்களில் ராஜ்நாத் ’நம்பர்-2’ என ஆகி விட்டதை கட்சியின் ஒரு மூத்த தலைவரே மாற்ற முயல்வதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர். இது குறித்த விரிவான செய்தி கடந்த மாதம் 16-ம் தேதி ‘தி இந்து’வில் விரிவாக வெளியாகி இருந்தது.
உத்தரப்பிரேதசத்தின் ஹைதர்கர் கிராமத்தை சேர்ந்த ராஜ்நாத் திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் பங்கஜ் சிங், உ.பி. மாநில பாஜக பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் லக்னோ தொகுதிக்கு மாறிய ராஜ்நாத், அவரது காஜியாபாத் தொகுதியை மகனுக்காக விட்டுக் கொடுப்பதாக பேச்சு எழுந்தது. அதன் பிறகு மீண்டும் உ.பி. இடைத்தேர்தலுக்காக நொய்டாவில் பங்கஜ் சிங்கிற்கு வாய்ப்பளிக்கப்படுவதாகவும் பேசப்பட்டு வந்தது.
இதை கெடுக்கும் வகையில் அவர் மீது புகார்கள் கிளப்பி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது நொய்டாவில் 62 வயதான விமலா பாதம் என்பவர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். ராஜ்நாத்தின் மற்றொரு மகனான நீரஜ் சிங் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.