Last Updated : 12 Jun, 2018 08:59 AM

Published : 12 Jun 2018 08:59 AM
Last Updated : 12 Jun 2018 08:59 AM

அரசியல் காற்றில் சிக்கிய கரும்பு விவகாரம்

தொ

டர்ந்து ஏற்பட்ட இடைத்தேர்தல் தோல்விகள், மோடி அரசுக்கு கிலியை ஏற்படுத்திவிட்டன. விளைவு, அடுத்தடுத்து நடக்கும் பல பொருந்தாத விஷயங்கள்.. விட்ட காசைப் பிடிக்க இருக்கும் காசை வைத்து சூதாடுவதா என்பார்கள். மோசமான அரசியல் காரணங்களுக்காக பணத்தை வாரியிறைப்பது என்ன நியாயம்? அனைத்து அரசுகளுமே தங்கள் கடைசி ஆண்டில் இதைச் செய்வது வழக்கம்தான். மோடி அரசும் இதைத்தான் செய்கிறதா.. அதுவும் தோல்வி பயத்துடன்..

கடந்த வாரம் சர்க்கரை, கரும்பு விவசாயத் துறைக்கு ரூ.7,000 கோடி சலுகைத் திட்டத்தை அரசு அறிவித்தது. இது பிரச்சினையை தீர்க்குமா.. அல்லது தள்ளிப் போடுமா.. எதுவும் நடக்காது..

சர்க்கரையின் பிரச்சினையே அது தேவைக்கு மிகவும் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதுதான். கரும்புக்கு அரசு சொல்லும் குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்குக் கொடுத்தால், சர்க்கரை ஆலைகளால் தாக்குப்பிடிக்க முடியாது. இறக்குமதி சர்க்கரையால் விலை குறைந்துவிடாமல் இருக்க அதுவும் தடை விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட விலைக்குக் குறைவாக ஏற்றுமதி செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்படுகிறது. இதனால் சர்க்கரை விலை கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது.

இந்திய விவசாயிகளில் பெரும்பாலோர் கரும்பு விவசாயம் செய்கின்றனர். சாப்பாட்டுடன் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஜிலேபியும் குலோப் ஜாமூனும் சாப்பிட வேண்டும் என சட்டம் போட்டால் தவிர, அத்தனை சர்க்கரையையும் உபயோகப்படுத்த முடியாது. சர்வதேச விலையை ஒப்பிடும்போது ஏற்றுமதியும் செய்ய முடியாது. ரூ.7 ஆயிரம் கோடி சலுகை அத்தனையும் நஷ்டம்தான். இதற்குப் பதிலாக தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கரும்பு விவசாயத்தைக் கைவிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக அளிக்கலாம். இந்த விவசாயிகள் அதற்குப் பதிலாக பழ உற்பத்தியில் ஈடுபடலாம். இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி கூட செலவிடலாம். இதனால் சிறப்பான பொருளாதார மாற்றங்கள் உருவாகும். ஆனால் தேர்தல் நடக்கும் 2019 மே மாதத்துக்குள் எந்த பலனும் ஏற்படாது. இதனால் யாருக்கும் சந்தோஷம் கிடையாது. அதனால்தான் ரூ.7 ஆயிரம் கோடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கரும்பு விளைநிலமான கைரானா இடைத் தேர்தல் தோல்வியை அடுத்து உடனடியாக இந்த அறிவிப்பு வெளியாகிறது. முஸ்லிம்களை எதிரிகளாகக் காட்டியதால், 2014 தேர்தலில் ஓட்டுப் போட்ட விவசாயிகள் இப்போது ஆத்திரத்துடன் இருப்பதை ஆளும் அரசு தெரிந்து கொண்டுள்ளது.

தோல்வி பயத்தில் கூட்டணிக் கட்சிகளையும் திருப்திபடுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. பஞ்சாபில் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம், குருத்வாரக்களில் நடக்கும் அன்னதானத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கும்போது, அதற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பல ஆண்டுகளாகவே கோரி வந்தது. கைரானா தோல்விக்கு மறுநாளே அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கும் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கும் இடையிலான மோதல் ஊரறிந்தது. இந்த வாரத்தில் மாநில முதல்வருடன் உத்தவ் வீட்டுக்கே போகிறார். முதல்வர் பட்நாவிஸை வீட்டுக்கு உள்ளே விடாமல் வெளியே காக்கவைத்து அவமானப்படுத்துகிறார் உத்தவ். இப்படி எதற்கு அவமானப்பட வேண்டும்?

பாஜக சார்பில் பெயருக்குத்தான் விவசாயத் துறை அமைச்சர் இருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் தோட்டத் தொழில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் அதில் பாதி தான் வளர்ச்சி அடைந்துள்ளது. 3.7 சதவீத வளர்ச்சி இருந்தபோதே, விவசாயிகள் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். இந்த நிலையில்தான் பசுவின் சாணத்தில் மட்டுமே இருக்கும் நல்ல பாக்டீரியா மூலம் உருவாக்கப்பட்ட இயற்கை உரத்தை அறிமுகம் செய்கிறது விவசாய அமைச்சகம். சிறிய பாட்டிலில் இருக்கும் இந்த உரத்தை இயற்கை குப்பையில் தெளித்தால் நல்ல உரம் கிடைக்கலாம். ஆனால், 2022-க்குள் விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயருமா என்பது சந்தேகம்தான். சர்க்கரை ஒன்றும் புதிய பிரச்சினை இல்லை. கடந்த 4 ஆண்டுகளாக இதை யாரும் கண்டுகொள்ளாமல் விட்டதால் பெரிய பிரச்சினையாக வளர்ந்து நிற்கிறது.

இரண்டாவதாக, செல்வாக்கு இல்லாத புதியவர்களை முதல்வர்களாகத் தேர்வு செய்தது. அவர்கள் கட்சிக்கு பாரம்தான். மூன்றாவதாக, கூட்டணி கட்சிகளை ஆணவத்துடன் நடத்தியதால் ஏற்பட்ட மோசமான நிலை. முழு மெஜாரிட்டியுடன் எப்படி ஆட்சி நடத்துவது என புதிய தலைமுறை அரசியல்வாதிகளுக்குத் தெரியவில்லை. அதிகாரத்தில் பங்கு பெறுவதற்காகத்தான் எல்லோருமே அரசியலுக்கு வருகிறார்கள் என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்கு பெரிய இலாகா கொடுப்பதில்லை. நீண்டநாள் கூட்டணிக் கட்சியான அகாலிதளத் தலைவரின் மருமகளுக்கு உணவு பதப்படுத்தும் இலாகா வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் அவரை ‘சட்னி அமைச்சர்’ எனக் கிண்டலாக அழைக்கிறார்கள். சிவசேனாவின் அனந்த கீதேவின் இலாகா என்னவென்று தெரியுமா..? யாருக்கும் தெரியாது. பாஜக கூட்டணி ஆட்சி நடத்துகிறது. ஆனால் பெரிய இலாகாக்களை தானே வைத்துக் கொண்டுள்ளது. இப்போது மீண்டும் எப்படியும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதற்காக எல்லா கட்சிகளையும் போல, பாஜகவும் தனது நிலையில் இருந்து இறங்கி வந்து வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டது.

சேகர் குப்தா

‘தி பிரின்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x