விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்வதே ஜனநாயகத்தின் மிகப் பெரிய பரீட்சை: கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
Updated on
1 min read

புனே: தனக்கு எதிரான வலுவான விமர்சனங்களை ஆட்சியாளர்கள் பொறுத்துக்கொண்டு அதை சுயபரிசோதனைக்கு உள்ளாக்குவதே ஜனநாயகத்தின் மிகப்பெரிய பரீட்சை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான நிதின் கட்கரி, எம்ஐடி - வோர்ல்ட் பீஸ் யுனிவர்சிட்டியில் வெள்ளிக்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர், “ஜனநாயகத்தின் மிகப்பெரிய பரீட்சை என்பது மன்னன் தனக்கெதிராக வரும் வலுவான கருத்துக்களை பொறுத்துக்கொள்வதும், அதனை சுயபரிசோதனைக்கு உள்ளாக்குவதுமே ஆகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை எதிர்க்கருத்து என்பது பிரச்சினையே இல்லை . கருத்துகள் இல்லாமல் இருப்பதே பிரச்சினை. அதாவது நான் வலதுசாரியும் இல்லை, இடதுசாரியும் இல்லை. சந்தர்ப்பவாதி என்று இருப்பதே.

எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் அச்சமின்றி தங்களின் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீண்டாமை, சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் மேன்மை பற்றிய கருத்துகள் நீடித்து இருக்கும் வரை தேசத்தைக் கட்டியெழுப்பும் பணி முழுமை அடைந்ததாக கூறமுடியாது.” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in