Last Updated : 05 Jun, 2018 07:58 AM

 

Published : 05 Jun 2018 07:58 AM
Last Updated : 05 Jun 2018 07:58 AM

கர்நாடக முதல்வருடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு: காவிரி பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டும்- பெங்களூருவில் இருவரும் கூட்டாக கருத்து தெரிவித்தனர்

காவிரி நதிநீர்ப் பிரச்சினையை தமிழகமும் கர்நாடகாவும் சுமூக மாக பேசித் தீர்க்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியும் வலியு றுத்தியுள்ளன‌ர்.

காவிரி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது. இனி இந்த அமைப்பு காவிரி நதிநீர் பங்கீட்டை கவனித்துக் கொள்ளும் என மத் திய அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி யின் தலைவருமான கமல்ஹா சன் நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்திப்பதற்காக பெங்களூரு வந்தார். முதல்வரின் கிருஷ்ணா இல்லத்துக்கு காலை 11.30 மணிக்கு வந்த கமல் ஹாசன், குமாரசாமிக்காக சுமார் 1.30 மணி நேரம் காத்திருந்தார். குமாரசாமி வந்த பிறகு அவரை சந்தித்து 10 நிமிடங்கள் பேசினார்.

பின்னர் குமாரசாமியும் கமல்ஹாசனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது குமாரசாமி கூறும்போது, “கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிகர். தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளதால் தமிழக மக்களின் கோரிக்கைக்காக என்னை சந்தித்தார். இரு மாநில மக்களும் நட்பின் அடிப்படையில், சகோதரர்கள் என்கிற முறையில் காவிரி பிரச்சினையை அணுக வேண்டும் என வலியுறுத்தினார்.

கர்நாடக விவசாயிகளும் தமி ழக விவசாயிகளும் காவிரியில் போதிய நீர் இல்லாததால் ஒரே மாதிரியான பிரச்சினையை அனுபவிக்கிறார்கள். இருவரின் பிரச்சினையும் முக்கியம் என்பதால், நீரை சரிசமமாக பகிர்ந்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தால், நான் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி பிரச்சினையை தீர்ப்பேன்” என்றார்.

பேச்சுவார்த்தையே தீர்வு

இதையடுத்து கமல்ஹாசன் கூறும்போது, “முதல்வர் குமாரசாமி மிகுந்த அன்புடனும் நட்புடனும் எனது கோரிக்கைகளை கேட்டுக்கொண்டார். குறுவை சாகுபடிக்கு நீர் வேண்டும் என வலியுறுத்தினேன். இரு மாநில மக்களும் சகோதர உணர்வுடன் இந்த பிரச்சினையை அணுக வேண்டும். காவிரி பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க வேண்டும். நான் வழக்கறிஞர் குடும்பத்தைச் சேர்ந்தவன். எல்லா பிரச்சினைக்கும் சட்டத் தால் தீர்வு தர முடியாது. வழக்கறிஞர்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என சொல்கின்றனர்.

நான் மக்களின் பிரதிநிதியாக, விவசாயிகளின் தேவைக்காக குமாரசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். தேவைப்பட்டால் கர்நாடகா - தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே பாலமாக செயல்படுவேன். என்னுடைய கட்சி புதியதாக உதயமான கட்சி என்பதால் எங்களுக்கு எந்த தலைக்கன‌மும் இல்லை. நட்பின் அடிப்படையிலான இந்த சந்திப்பு பல நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு தரும் என நம்புகிறேன்” என்றார். இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் தீர்த்துவைக்கப்பட்டுள்ள காவிரி பிரச்சினையை மீண்டும் கிளறி, பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்க வேண்டும் என கமல் ஹாசன் கூறியதற்கு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

காலா முக்கியம் இல்லை

அப்போது செய்தியாளர்கள் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலாவுக்கு கர்நாடகாவில் தடை விதித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசன், “காலா முக்கியமான விஷயம் இல்லை. அதனை கவனித்துக்கொள்ள திரைப்பட வர்த்தக சபை இருக்கிறது. அதில் முடிவை எடுக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். இந்த சந்திப்பின்போது ஒரு வார்த்தை கூட காலா திரைப்படத்தை பற்றி பேசவில்லை. எங்களுக்கு காவிரி நீர்தான் முக்கியம்” என்றார். குமாரசாமியும், “இந்த சந்திப்பில் காலா திரைப்படம் குறித்து பேசவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x