Published : 27 Aug 2014 02:48 PM
Last Updated : 27 Aug 2014 02:48 PM

என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலகுவேன்: ராஜ்நாத் சிங்

மகனுக்கு கட்சி சீட் கேட்டது தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அவதூறு என குறிப்பிட்டுள்ள பாஜக முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங், 'குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்தே விலக தயார்' என தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங். இவரை உத்திரப் பிரதேசம் மாநிலம் நொய்டா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக்க, ராஜ்நாத் சிங் பிரதமரை நெருக்கியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகின.

பாஜக புதிய தலைவர் அமித் ஷா தலைமையில், ராஜ்நாத் சிங் ஓரங்கட்டப்படுவதாகவும். இதை உணர்ந்தே தன் மகனுக்காக பிரதமரிடமே ராஜ்நாத் நேரில் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

செப்டம்பர் 13-ல் நடைபெறவுள்ள நொய்டா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக விம்லா பாதம் என்பவரை கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஊடகங்களில் வெளியான செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார் ராஜ்நாத் சிங்.

இதேபோல், பங்கஜ் சிங்கின் நடத்தைகளால் அதிருப்தி அடைந்த பிரதமர் நரேந்திர மோடி அவரை கண்டித்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தன. இந்த குற்றச்சாட்டையும் ராஜ்நாத் மறுத்துள்ளார்.

என் மீதும், என் குடும்பத்தினர் மீதுமான குற்றச்சாட்டு நிரூபணமானால் அரசியலலில் இருந்தே விலக தயார் என கூறியுள்ளார்.

டெல்லியில் நார்த் பிளாக்கில் உள்ள அவரது அலுவலகத்தின் வெளியே செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது: "என் மகன், என் குடும்பம் மீதான இந்த அவதூறு புரளி தானாகவே அடங்கிவிடும் என நினைத்தேன். ஆனால் அது இன்றளவும் தொடர்கிறது. நான் இந்திய மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

என் மீதான குற்றச்சாட்டோ இல்லை என் குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டோ நிரூபணமானால் என் பதவியை நான் துறந்துவிடுகிறேன். அரசியலில் இருந்தே விலகி வீட்டில் அமர்ந்துகொள்கிறேன்.

இந்த அவதூறு தொடர்பாக, பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரிடம் பேசினேன். அவர்கள் அதிர்ச்சி தெரிவித்தனர்" என்றார்.

பிரதமர் அலுவலகம் மறுப்பு:

ராஜ்நாத் சிங் அவரது மகன் பங்கஜ் சிங்கை நொய்டா இடைத்தேர்தல் பாஜக வேட்பாளராக அறிவிக்கக் கோரி பிரதமரிடம் பேசவில்லை என பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. ராஜ்நாத் சிங்கின் மகனை பிரதமர் கண்டித்ததாக எழுந்துள்ள செய்திகளையும் அரசு மறுத்துள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்: "இந்த குற்றச்சாட்டுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இதில் உண்மையில்லை. அரசின் மீது களங்கம் விளைவிக்க வேண்டுமென்றே இத்தகைய குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அவதூறை பரப்புபவர்கள் தேசத்தின் நலனை சிதைக்கும் வகையில் செயல்படுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x