Published : 18 Sep 2024 04:42 AM
Last Updated : 18 Sep 2024 04:42 AM

ஒடிசாவில் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 நிதியுதவி: சுபத்ரா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஒடிசா அரசின் சுபத்ரா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 25 லட்சம்பெண்களுக்கான நிதியுதவியை அவர் வழங்கினார்.

சமீபத்தில் நடந்த ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. மோகன் சரண் மாஜி முதல்வராக பதவியேற்றார். ஒடிசா தேர்தலின்போது, பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் 5 ஆண்டுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பாஜக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. சுபத்ரா என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்திருந்தது.

இதன்படி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற அரசு திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, சுபத்ரா திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர். முதல்கட்டமாக 25 லட்சம் பெண்களுக்கான நிதியுதவியை பிரதமர் மோடி வழங்கினார். சுபத்ரா திட்டத்தின்படி ரக்சா பந்தன் கொண்டாடப்படும் ஆகஸ்ட்மாதம் மற்றும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் மார்ச் 8ஆகிய தேதிகளில் இரு தவணைகளாக தலா ரூ.5,000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது.

ரூ.3,800 கோடி திட்டம்.. புவனேஸ்வரில் நடைபெற்ற விழாவில் ரூ.2,800 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் சுமார் 13 லட்சம் பயனாளிகளுக்கான முதல் தவணையை அவர் வழங்கினார். ரூ.1000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் எனது தாயாரை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். அவர் பாசத்தோடு எனக்கு இனிப்பு ஊட்டுவார். இந்த பிறந்த நாளில் ஒடிசாவை சேர்ந்த பழங்குடி சகோதரி என்னை ஆசிர்வதித்து எனக்கு இனிப்பை (பாயசம்) வழங்கினார். இந்த நினைவு என் வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும்.

ஏழைகள். தாழ்த்தப்பட்டோர், நலிவுற்றோர், பழங்குடி மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்காக மிக கடினமாக உழைத்து வருகிறேன். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் ஒடிசாவில் வெற்றிகரமாக அமல்செய்யப்பட்டு உள்ளன. ஒடிசாவை சேர்ந்த பழங்குடி பெண், நாட்டின்குடியரசுத் தலைவராக பதவி வகிக்கிறார். அடுத்த 5 ஆண்டுகளில் ஒடிசாவில் பல்வேறு வளர்ச்சி திட் டங்கள் மேற்கொள்ளப்படும். நமோ பாரத் ரயில் சேவை தொடங்கப்படும். மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு: விநாயகர் சதுர்த்தி என்பது மதம் சார்ந்த விழா அல்ல. இந்தவிழா நாட்டின் சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது. பாலகங்காதர திலகர், விநாயகர் சதுர்த்தி விழாவின் மூலம் மக்களிடையே சுதந்திர வேட்கையை ஊட்டினார். இதன்காரணமாக அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை வெறுத்தனர். மக்களிடையே பிளவை ஏற்படுத்த சாதியின்பெயரால் பிரித்தாளும் சூழ்ச்சியை கடைப்பிடித்தனர்.

இன்றைய காலத்தில் பதவிஆசை கொண்ட சிலர் மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சிசெய்கின்றனர். இதன் ஒரு பகுதியாகவிநாயகர் சதுர்த்தி விழாவிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு நான்விநாயகர் சதுர்த்தி விழாவில் (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வீடு) பங்கேற்றேன். இதை பொறுக்க முடியாத காங்கிரஸார் கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு,, விநாயகரை கைது செய்து சிறையில் தள்ளியது. இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான புகைப்படங்களை பார்த்து ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இத்தகைய வெறுப்பு சக்திகள் மிகவும் ஆபத்தானவை. இவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x