Published : 07 Jun 2018 08:49 AM
Last Updated : 07 Jun 2018 08:49 AM

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்திடம் 4 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) அனுமதி வழங்கியது. இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்க பிரிவினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கார்த்தி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, கடந்த மே 31-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், ஜூலை 3-ம் தேதி வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிதம்பரத்துக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது. இதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேற்று காலை 11 மணிக்கு ப.சிதம்பரம் ஆஜரானார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு எப்ஐபிபி அனுமதி வழங்கியது குறித்து அவரிடம் சிபிஐ பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரிகள் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விசாரணை முடிந்து வெளியே வந்த சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. மேலும் எப்ஐபிபி கோப்புகளில் இடம்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் கேள்வி பதில்கள் அமைந்தன. எனவே, புதிதாக ஆவணப்படுத்த பெரிதாக ஒன்றும் இல்லை” என்றார்.

மீண்டும் சம்மன்

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினர் ப.சிதம்பரத்திடம் நேற்று முன்தினம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனிடையே, இந்த வழக்கில் விசாரணைக்காக வரும் 12-ம் தேதி ஆஜராகுமாறு சிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.- ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x