Published : 05 Aug 2014 09:44 AM
Last Updated : 05 Aug 2014 09:44 AM

செல்போனில் வந்த விளம்பர அழைப்பு மூலம் காதல் வலையில் சிக்கிய இளைஞர் தற்கொலை: காதலி அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதால் பரிதாபம்

செல்போனில் வந்த விளம்பர அழைப்பு மூலம் காதல் வலையில் சிக்கிய இளைஞர், காதலி பணம் கேட்டு மிரட்டியதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

டெல்லியின் ஒக்ளா பகுதியிலுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் புதிதாக சேர்ந்து பணியாற்றியவர் 23 வயது கவுசல் குமார். சிம் கார்டு விற்பனை தொடர்பாக ஒரு செல்போன் நிறுவனத்திலிருந்து சுமார் 2 மாதங்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது.

வழக்கமான வாடிக்கையாளர்களிடம் பேசுவதுபோல் பேசிய அந்த பெண், தனது பெயர் நேஹா என அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிறார். இதே பெண் மறுநாளும் போன் செய்து விளம்பரம் செய்யாமல் நலம் விசாரிக்க, கவுசல் தடுமாறி உள்ளார். பிறகு இருவரும் முகநூல் மூலம் பழகியதுடன் காதலிக்கத் தொடங்கி உள்ளனர். புகைப்படங்களை பரிமாறிக் கொண்ட இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

எனினும் தனக்கு 23 வயது எனக் கூறிய நேஹாவை குமார் நேரில் சந்தித்ததில்லை. ஒருநாள் 40 வயதான ப்ரீத்தி, குமாரின் அலுவலகத்துக்கு திடீரென நேரில் வந்துள்ளார். நேஹாவின் மூத்த சகோதரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ப்ரீத்தி, ‘உன்னால் நேஹா தற்கொலை செய்து கொள்ள முயன்ற’தாகக் கூறி உள்ளார். இதுகுறித்து போலீஸில் புகார் செய்யப் போவதாகவும் குமாரை மிரட்டி உள்ளார். இதனால் மிகவும் பயந்து போன குமாரிடம் ப்ரீத்தி அவ்வப்போது மிரட்டி பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் பிரீத்தியாக நடித்தவர் நேஹாவே என்பதை எப்படியோ தெரிந்து கொண்ட குமார் பணம் தர மறுத்துள்ளார். இதனால் மீண்டும் அலுவலகம் வந்த ப்ரீத்திக்கும் குமாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நொந்து போன குமார், தனது வீட்டுக்கு வந்து முழு சம்பவத்தையும் கடிதமாக எழுதி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். பிறகு நேராக ஒக்ளா பகுதியில் மெட்ரோ ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இவரது பிரேதத்தைக் கைப்பற்றிய போலீஸாரிடம் அவர் எழுதிய கடிதம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் போலியான விளம்பர அழைப்பு மூலம் நேஹா என்ற பெயரில் அந்தப் பெண் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இதில் மோசடியில் ஈடுபட்ட ப்ரீத்திக்கு வேறு சிலருடன் தொடர்பு இருக்கலாம் எனக் கருதி டெல்லி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமாரின் பாக்கெட்டிலிருந்து கைப்பற்றப் பட்ட ஆன்ட்ராய்டு மொபைல் போனும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x