இமாச்சல பிரதேச மசூதி விவகாரம்: அங்கீகரிக்கப்படாத கட்டிட பகுதியை இடிக்க முஸ்லிம்கள் ஒப்புதல்

இமாச்சல பிரதேச மசூதி விவகாரம்: அங்கீகரிக்கப்படாத கட்டிட பகுதியை இடிக்க முஸ்லிம்கள் ஒப்புதல்
Updated on
1 min read

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள சின்ஜவுலி மசூதியில் கட்டப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத கட்டிட பகுதிகளை இடித்து அகற்ற அனுமதி கோரி முஸ்லிம் நலக் குழு நகராட்சி ஆணையரை நேற்று சந்தித்து மனு அளித்தது.

இந்த நலக் குழுவில் இமாம், வக்ப் வாரியம் மற்றும் மசூதி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து முஸ்லிம் நலக் குழு உறுப்பினர் முப்தி முகமது ஷாபி காஸ்மி கூறுகையில், “ சஞ்சவுலி மசூதியின் அங்கீகரிக்கப்படாத பகுதியை சீல் வைக்கவும், நீதிமன்ற உத்தரவின்படி அந்த பகுதியை நாங்களே இடித்து அகற்ற அனுமதி கோரியும் சிம்லா நகராட்சி ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளோம்.

இந்த விவகாரத்தில் எங்கள் மீது எந்த அழுத்தமும் இல்லை. நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம். அதன் அடிப்படையில் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். எங்கள் பகுதியில் நல்லிணக்கமும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

முஸ்லிம் நலக் குழுவின் இந்த நிலைப்பாட்டுக்கு தேவபூமி சங்கர் கமிட்டி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்த கமிட்டியின் உறுப்பினர் விஜய் சர்மா கூறுகையில், “ முஸ்லிம் சமூகத்தினரின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். சமூக நலன் கருதி இந்த முடிவை எடுத்ததற்காக அவர்களை ஆரத்தழுவி பாராட்டுவோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in