

இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை வசதி குறைவாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) 2000-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நலவாழ்வு என்ற இலக்கை உலக நாடுகளுக்கு கடந்த 1997-ம் ஆண்டு அறிவித்தது. அனைத்து மக்களுக்கும் அடிப்படை ஆரம்ப சுகாதாரம் கிடைக்கச் செய்தால், இந்த இலக்கை அடைய முடியும் எனவும் தெரிவித்து இருந்தது. சில காரணங்களால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளால் இலக்கை அடைய முடியவில்லை.
தொண்டு நிறுவன ஆய்வு
இந்நிலையில், ‘மில்லினியம் டெவலப்மென்ட் கோல்’ என்ற இலக்கை தனது உறுப்பு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அனைவருக்கும் பாதுகாப்பான குடி நீர், கழிப்பறை வசதியை 2015-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கு தெரிவித்தது.
இதையடுத்து, இந்தியாவில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கிடைக்கிறதா என்ற ஆய்வை டெல்லியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தியது. நாடு முழுவதும் ஆய்வு மூலம் சேகரித்த மொத்த புள்ளி விவரங்களையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் மாதம் ஒப்படைத்தது. அந்த முடிவுகளை கடந்த 10-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டது.
குடிநீர், கழிப்பறை வசதி
ஐ.நா. ஆய்வு முடிவுகள் பற்றி தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநரும் தமிழக பொது சுகாதார சங்கத்தின் தலைவருமான டாக்டர் எஸ்.இளங்கோ கூறியதாவது:
இந்தியாவில் நகர்ப்புறத்தில் வாழும் 41 சதவீதத்தினருக்கும், கிராமப்புறத்தில் 60 சதவீதத்தினருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. அதேபோல நகர்ப்புறத்தில் 99.6 சதவீதமும், கிராமப்புறத்தில் 97 சதவீதமும் பாதுகாப்பான குடிநீர் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மேலும், கழிப்பறை வசதிகளும் குறைவாகவே உள்ளது. நகர்ப்புறத்தில் 37 சதவீதத்தினரும், கிராமப்புறத்தில் 40 சதவீதத்தினரும் திறந்தவெளி கழிப்பறையை உபயோகப்படுத்தி வருகின்றனர். பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் 55 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை கழிப்பறை வசதியே இல்லை.
கழிப்பறை வசதி இல்லாததால் குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு ஏற்படுகிறது. வயிற்றுப் போக்கு, மஞ்சள்காமாலை போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இறப்பு விகிதம் அதிகரிக்கிறது என ஐ.நா. சபையின் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இளங்கோ தெரிவித்தார்.