

தமிழக மீனவர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவித்துள்ளது.
இலங்கை சிறையில் அடை பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்றும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டுமென்றும் திமுக முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இது தொடர்பாக மேலும் கூறியது: இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. இலங்கை கடல் எல்லைக்குள் வரும் இந்திய மீனவர்களை கைது செய்யாதீர்கள் என்று இலங்கை கடற்படைக்கு நாங்கள் உத்தரவிட முடியுமா?
இது அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நீங்கள் கேள்வி எழுப்பலாம் என்று நீதிபதிகள் கூறினர். தமிழகம் சார்பில் இந்த வழக்கில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணியம் பிரசாத், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும்போதுதான் பிரச்சினை எழுகிறது என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, கச்சத் தீவு 1974 முதல் இலங்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. அப்பகுதி நமக்கு வேண்டுமென்றால் நாம் இலங்கையுடன் போருக்குதான் செல்ல வேண்டும் என்றார்.
இப்போது மத்தியில் புதிய அரசு அமைந்துள்ளதால் அவர்களிடம் இந்த பிரச்சினையை கொண்டு செல்லலாம் என்று தலைமை நீதிபதி லோதா கூறினார்.
மனுதாரர்களில் ஒருவர் மக்களவை துணைத் தலைவர் மற்றொருவர் முன்னாள் எம்.பி.யாக இருக்கிறார். தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படுவது அடிக்கடி நடக்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டு அவை தீர்க்கப்பட்டும் வருகிறது.
இந்த பிரச்சினை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை எம்.பி.க்கள் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்றும் அட்டார்னி ஜெனரல் நீதிமன்றத்தில் கூறினார்.