Published : 12 Sep 2024 05:45 AM
Last Updated : 12 Sep 2024 05:45 AM
மும்பை: மகாராஷ்டிர தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் - டிசம்பரில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஆகிய 3 கட்சிகளை கொண்ட மகாயுதி கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 160 இடங்களில் போட்டியிட விரும்புகிறது. அதேவேளையில் சிவசேனா 100 முதல் 105 இடங்களிலும் என்சிபி 60 முதல் 80 இடங்களிலும் போட்டியிட விரும்புகின்றன. இதனால் மகாயுதி கூட்டணியில் தொகுதிகளுக்கான மோதல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் மும்பைவந்தபோது அவரிடம் 100 தொகுதிகளுக்கு மேல் தாங்கள் போட்டியிட விரும்புவதாக சிவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்குகளையும் கடந்த காலத்தில் ஒருங்கிணைந்த சிவசேனா பெற்ற வாக்குகளையும் அமித் ஷா ஒப்பிட்டு காட்டியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மராத்தி மற்றும் இந்துத்துவா வாக்குகளை நாங்கள் தக்கவைத்துள்ளோம். நாங்கள் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே மகா விகாஸ் அகாடி கூட்டணியை தோற்கடிக்க முடியும்’’ என்றார். இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் மகாயுதி கூட்டணியில் தொகுதிபங்கீடு இறுதி செய்யப்படும் என்றுபாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் 25 இடங்களில் நட்புரீதியில் போட்டியிட கூட்டணிக் கட்சிகளுக்கு பாஜக பரிந்துரை செய்ததாக வெளியான தகவலை துணை முதல்வர் அஜித் பவார் மறுத்துள்ளார்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக மகாயுதியில் ஏற்பட்டுள்ள சலசலப்புக்கு மத்தியில், மக்களவைத் தேர்தலின் போது நடந்தது போல்,வேட்பாளர்களை அறிவிப்பதில் இம்முறை தாமதம் கூடாது எனபாஜகவிடம் சிவசேனா நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்குள் முதலில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டால் வெற்றி வாய்ப்பின் அடிப்படையில் தொகுதிகளை பிறகு பரிமாறிக் கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT