Published : 19 Aug 2014 11:48 AM
Last Updated : 19 Aug 2014 11:48 AM

பத்து ரூபாயில் பாரம்பரிய உணவுகள்: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவகம் திறப்பு

பத்து ரூபாயில் பசியாறும் வகையில், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாரம்பரிய உணவகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

‘பாஸ்ட் புட்’ கலாச்சாரத்துக்கு அடிமையாவதைத் தடுத்து, அதிலிருந்து மீளவும், நமது உணவுக் கலாச்சாரத்தை இளையதலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும் இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட இயக்குநர் பழனி, பாரம்பரிய உணவகத்தைத் திறந்துவைத்தார்.

இந்த உணவகத்தில் கம்பு, சோளம், வரகு, திணை, கேழ்வரகு, குதிரை வாலி, சாமை போன்ற சிறு தானியங்களில் இருந்து சாம்பார் சாதம், தயிர் சாதம், இனிப்பு பொங்கல், மிளகு, கருவேப்பிலை சாதம், வாழைப்பூ சாதம், காளான் சாதம், அவல், முளைகட்டிய பாசிபயறு, முளைகட்டிய தட்டைப் பயறு மற்றும் சுண்டல் வகைகள், குதிரைவாலி தோசை, கேப்பை தோசை, வரகு தோசை என 100-க்கும் அதிகமான உணவுகள் ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்த உணவுகளை தயாரிப்பதற்கு அம்மி, ஆட்டுக்கல், உரலையே பயன்படுத்துகின்றனர்.

உணவகத்தை நடத்தும் அன்பு மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவி லதா கூறியது:

‘பாரம்பரிய உணவு முறைகளிலிருந்து முற்றிலும் வெளியே வந்துவிட்டோம். சர்க்கரை நோய், சிறுநீரக நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய் என 90 சதவீத நோய்கள், தற்போதைய உணவு முறைகளாலேயே உண்டாகின்றன. குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகாமல், பெரும்பாலானோர் அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாவதற்கும் புதிய உணவுக் கலாச்சாரமே காரணம். நமது சிறுதானிய உணவுமுறைகளை மீட்டெடுத்தாலே இத்தகைய நோய்களை முற்றிலும் தவிர்க்க முடியும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x