Published : 09 Sep 2024 07:24 AM
Last Updated : 09 Sep 2024 07:24 AM

அப்சல் குருவுக்கு மாலை அணிவித்திருக்க வேண்டுமா? - உமர் அப்துல்லாவுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி

ஸ்ரீநகர்: நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கு மாலை அணிவித்திருக்க வேண்டுமா? என உமர் அப்துல்லாவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேர வைக்கு வரும் 18, 25 மற்றும் அக்.1ஆகிய தேதிகளில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில்முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள ராம்பன் மாவட்டத்தில், பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது: தேசிய மாநாட்டு கட்சி தீவிரவாதிகள் மீது இரக்கம் காட்டுகிறது. தீவிரவாதி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்கக் கூடாது என தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா கூறியதாககேள்விப்பட்டேன். நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய அப்சல்குருவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்க வேண்டுமா என உமர் அப்துல்லாவிடம் நான் கேட்கிறேன்?

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்த பிரிவு நீக்கப்பட்ட பிறகு கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலை கிடைத்துள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிஅமைத்தால், ஜம்மு காஷ்மீரில் மேலும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்களும் இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டு பகுதி என பாகிஸ்தான் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறுகிறார். ஆக்கிமிப்பு காஷ்மீர்பகுதி மக்களை வெளிநாட்டினராக பாகிஸ்தான் கருதும் நிலையில்,நாங்கள் அவர்களை இந்தியர்களாகவே கருதுகிறோம். காஷ்மீரில் நடக்கும் தீவிரவாத செயலில் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்தான். பாகிஸ்தானுடனான உறவைமேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம். அதற்கு தீவிரவாத செயலுக்கு துணை போவதை அந்தநாடு நிறுத்த வேண்டும். அப்போதுதான் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தையை தொடங்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 2001-ம் ஆண்டு நிகழ்ந்த நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 2013-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். இந்நிலையில், அப்சல் குருவை தூக்கில் போட்டிருக்கக் கூடாது என்றும் அதனால் ஒரு பயனும் இல்லை என்றும் உமர் அப்துல்லா கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x