Published : 17 Jun 2018 09:53 AM
Last Updated : 17 Jun 2018 09:53 AM

எல்லையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: வங்கதேச வீரர்களுக்கு பிஎஸ்எப் வாழ்த்து- அத்துமீறி தாக்கியதால் பாகிஸ்தானுடன் இனிப்பு பரிமாற்றம் இல்லை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வங்கதேச எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கினர். தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்பு பரிமாற்றம் நடைபெறவில்லை.

காஷ்மீர் ரஜவுரி மாவட்டம், நவ்ஷெரா செக்டார், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இதில் விகாஸ் குருங் (21) என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இந்த வீரர் திருமணம் ஆகாதவர். இவருக்கு தாய் மட்டுமே உள்ளார்.

இந்நிலையில் ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “ரம்ஜான் பண்டிகை நாளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது மிகவும் நெறியற்ற செயல். பாகிஸ்தானின் இந்த செயலுக்கு தகுந்த இடத்தில் தகுந்த நேரத்தில் பாடம் கற்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

கடந்த 13-ம் தேதி சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பிஎஸ்எப் வீரர்கள் 4 பேர் இறந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தான் தாக்குதலில் பிஎஸ்எப் வீரர்கள் 11 பேர் இறந்துள்ளனர்.

தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலத்தில் அட்டாரி எல்லையில் இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பு பரிமாறிக்கொள்வது வழக்கம். இந்நிலையில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் தாக்குதல் காரணமாக ரம்ஜான் பண்டிகை நாளான நேற்று பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்பு பரிமாறிக்கொள்வதை பிஎஸ்எப் ரத்து செய்து விட்டது. என்றாலும் வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுடன் பிஎஸ்எப் வீரர்கள் வழக்கம்போல் நேற்று இனிப்பு பரிமாறிக்கொண்டனர்.

இளைஞர் பலி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஸ்ரீநகர், அனந்தநாக், ஷோபியான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று ரம்ஜான் தொழுகைக்கு பிறகு முஸ்லிம் இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் பாதுகாப்பு படையினருடன் மோதல் ஏற்பட்டது. அனந்தநாக் நகரின் ஜங்லமண்டி பகுதியில் ஏற்பட்ட மோதலில் பாரக்போரா என்ற கிராமத்தை சேர்ந்த ஷெராஸ் அகமது என்ற இளைஞர் ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x