Last Updated : 06 Jun, 2018 10:04 AM

 

Published : 06 Jun 2018 10:04 AM
Last Updated : 06 Jun 2018 10:04 AM

நாட்டுக்காக வீரமரணம் அடைந்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்த புதிய செயலி

வீரமரணம் அடைந்த ராணுவத்தினருக்கு டிஜிட்டல் முறையில் அஞ்சலி செலுத்தும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நாடு முழுவதிலும் சுமார் 120 போர் நினைவுச் சின்னங்கள் உள்ளன. இங்கு பொதுமக்கள் என்றாவது ஒரு முறை நேரில் சென்று, நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதுபோல், பிரதமர், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ராணுவப் படைகளின் தளபதிகளும் டெல்லியில் இந்தியா கேட்டில் உள்ள ‘அமர் ஜவான் ஜோதி’ நினைவுச் சின்னத்திற்கு வருடம் ஒரு முறை வந்து அஞ்சலி செலுத்துவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.

இதில், புதிய முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் அஞ்சலி செலுத்தும் மக்களின் எண்ணிக்கை கூடும் எனக் கருதப்படுகிறது. இதற்காக, பொதுமக்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே தங்கள் கைப்பேசி மூலம் அஞ்சலி செலுத்த, ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் ‘பாரத் கா வீர்’ (இந்தியாவின் வீரன்) என்ற பெயரில் இதை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்து வருகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறும்போது, “பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த செயலி மற்றொரு சாதனையாக இருக்கும். புதிய செயலி மூலம் அஞ்சலி செலுத்துவோர் விவரங்களையும் பாதுகாக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்தனர்.

தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களால் அஞ்சலி செலுத்த நினைவுச் சின்னங்களுக்கு வர முடியாது. இதுபோன்றவர்களுக்கு புதிய செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு மக்கள் நிதியுதவி செய்ய விரும்பினால் அதற்கான வசதிகளும் இந்த செயலியில் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் வீரமரணம் அடைந்தோருக்கான நிதி பெருகவும் வாய்ப்புள்ளதாக பிரதமர் அலுவலகம் கருதுகிறது. இந்த செயலியில் வீரமரணம் அடைந்தவர்களின் சாதனைகள், படங்கள் மற்றும் குடும்ப விவரமும் அளிக்கப்பட உள்ளது.

சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 18 பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்களுக்கு மக்கள் இணையதளம் மூலம் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் ஒப்புகைச்சீட்டு தபால் மூலம் அனுப்பப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x