Last Updated : 27 Jun, 2018 07:39 PM

 

Published : 27 Jun 2018 07:39 PM
Last Updated : 27 Jun 2018 07:39 PM

50 ஆண்டுகால ‘யுஜிசி’ அமைப்பை நீக்குகிறது மத்திய அரசு; உயர்கல்வி ஆணையம் கொண்டுவர முடிவு

அரைநூற்றாண்டுகாலம் பழமைவாய்ந்த பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) என்ற அமைப்பை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய உயர் கல்வி ஆணையம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான வரைவுசட்டத்தை மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்டு மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது.

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு கடந்த 1956-ம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. பல்கலைக்கழக கல்வி, உயர்கல்வியைக் கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இந்த அமைப்பு வருகிறது. பல்கலைக்கழங்களுக்கு நிதி வழங்குவதால், ஏற்பு வழங்குவதால் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. டெல்லியில் தலைமையிடமும், புனே, போபால், ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு, கவுகாத்தி போன்ற நகரங்களில் கிளை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

நம்முடைய யுஜிசி அமைப்பு என்பது இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் யுனிவர்சிட்டி ஆப் கிராண்ட் கமிட்டி ஆப் யு.கே என்ற அமைப்பை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

அரைநாற்றாண்டுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் யுஜிசி அமைப்பை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய உயர் கல்வி ஆணையத்தைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேஹர் ட்விட்டரில் கூறுகையில், வரலாற்றுச்சிறப்பு மிக்க முடிவு எடுத்திருக்கிறோம். யுஜிசி அமைப்பை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி ஆணையம் கொண்டு வருகிறோம்.

அதற்கான வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையிலும், கல்வித்துறையை மேம்படுத்தி, மாணவர்களின் திறனைமேம்படுத்தும் வகையில் மாற்றப்படுகிறது எனத் தெரிவித்தார்.

இப்போது இருக்கும் யுஜிசி என்பது பல்கலைக்கழகங்களுக்கு நிதிகளையும் ஒதுக்கி, கல்வி மேம்பாட்டையும் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால், உயர் கல்வி ஆணையம் முழுக்க கல்வி தொடர்பான பணிகளை மட்டுமே கவனிக்கும். மாறாக, நிதிதொடர்பான பணிகள், பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்குதல் போன்றவை மனித வளத்துறைஅமைச்சகத்தின் கீழ் வரும் என வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதவளத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் உயர் கல்வி ஆணையம் குறித்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள், கல்வித்துறையில் தொடர்புடையவர்கள் தங்களின் கருத்துக்களை ஜுலை 7-ம் தேதி மாலை 5-மணிக்குள் தெரிவிக்கலாம் எனத் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வரைவுமசோதா, வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

இதற்கு முன் தொழிற்நுட்ப கல்வி, ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான பயிற்சி கவுன்சில், யுஜிசி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து ஒரு அமைப்பாக உருவாக்க அரசு திட்டமிட்டு இருந்தது.

இப்போதுள்ள யுஜிசி அமைப்பு பல்கலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் போன்ற பணிகளைச் செய்வதால், கல்விநிலையங்களை கண்காணிக்க முடிவதில்லை, கல்வித்தரத்தை உயர்த்த முடியவில்லை, ஆதலால், உயர்கல்வி கண்காணிப்பை வலிமைப்படுத்தும் நோக்கில் தேசிய உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x