

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் தம் அமைச்சகத்தின் விவாதத்தில் பல உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சுமார் இரண்டு மணி நேரம் நீண்ட நெடிய விளக்கத்துடன் பதில் அளித்தார். இதனால், அவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் அவஸ்தையில் நெளிந்தனர்.
வழக்கமாக உறுப்பினர்களின் நீண்ட உரைகளுக்குத் தடை போடும் சபாநாயகர் இந்த முறை அமைச்சருக்கு தடை போட பலமுறை குறுக்கிட வேண்டியதாயிற்று. தன் விளக்கமான பதிலை ராஜ்நாத் அளித்துக் கொண்டிருந்தபோது துணை சபாநாயகரான பி.ஜே.குரியன், `இன்னும் எவ்வளவு நேரத்தில் முடிக்கப் போகிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பினார்.
உள்துறை அமைச்சக விவாதத்தின்போது கேள்வி எழுப்பிய உறுப்பினர்களில் ஒருவரான காங்கிரஸின் சத்யவரத் சதுர்வேதி, அமைச்சரின் பதிலுக்கு பின் அவரை கை எடுத்துக் கும்பிட்டபடி, இனி எந்தக் கேள்வியும் ராஜ்நாத்திடம் கேட்க மாட்டேன் என கிண்டல் அடித்தார். இன்னும் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜ்நாத்திடம், அவரிடம் கேள்வி கேட்ட உறுப்பினர்கள் அவையில் இல்லை எனச் சுட்டிக் காட்டியும் அவர் தம் நீண்ட பதிலை முடிக்கவில்லை.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமாளிக்க இது ஒரு சிறந்த வழி போல’ எனக் கிண்டலடித்தார். அமைச்சர் முடித்த பதில் உரைக்குப் பின் அவை ஒத்தி வைக்கப்பட, பல உறுப்பினர்கள் ‘அப்பாடா! ஒருவழியாக முடிந்தது அமைச்சரின் பதில்’ எனபெருமூச்சுடன் விடை பெற்றது விநோதமாக இருந்தது.