Published : 06 Sep 2024 05:24 AM
Last Updated : 06 Sep 2024 05:24 AM

பிடிக்கவில்லையென்றால் இந்தியாவில் செயல்பட வேண்டாம்: விக்கிப்பீடியாவுக்கு டெல்லி ஐகோர்ட் கண்டனம்

புதுடெல்லி: “இந்தியா பிடிக்கவில்லையென்றால், இங்கு செயல்பட வேண்டாம்” என விக்கிப்பீடியா நிறுவனத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

விக்கிப்பீடியா இணையதளம் தகவல்களை இலவசமாக பார்க்கும் பிரபல ஆன்லைன் என்சைக்ளோபீடியாவாக திகழ்கிறது. இதில் உள்ள விவரங்களை, யார் வேண்டுமானாலும், ‘எடிட்’ என்ற வசதியை பயன்படுத்தி விரிவுபடுத்தலாம். இதில் ஏஎன்ஐ என்ற செய்தி நிறுவனம் பற்றி தகவலில் யாரோ ஒருவர் “அரசின் பிரச்சார நிறுவனம்” என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக விக்கிப்பீடியா நிறுவனத்தின் மீது ஏஎன்ஐநிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து தகவலை எடிட் செய்த 3 பேரின் கணக்குகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதை விக்கிப்பீடியா தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் விளக்கம் அளித்த விக்கிப்பீடியா நிறுவனம், “தங்கள் நிறுவனம் தொழில்நுட்ப வசதிகளை மட்டுமே அளிக்கிறது என்றும், தகவல்கள் நாங்கள் எடிட் செய்வதில்லை” என கூறியது.

இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வீக்கிப்பீடியா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “விக்கிப்பீடியா நிறுவனம் இந்தியாவில் இல்லை. அதனால் தகவல்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்றார். இதனால் விக்கிப்பீடியா நிறுவனத்துக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி கூறுகையில், “நிறுவனம் இந்தியாவில் உள்ளதா என்பது முக்கியமல்ல. நீங்கள் இந்திய சட்டத்தை பின்பற்ற வேண்டும். இந்தியா பிடிக்கவில்லை என்றால், நீங்கள் இங்கு செயல்பட வேண்டாம். நாங்கள் உங்கள் இணையதளத்தை தடை செய்ய மத்திய அரசிடம் கூறுவோம். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் நடைபெறும்போது, விக்கிப்பீடியா நிறுவனத்தின் பிரதிநிதி நேரில் ஆஜராக வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x