Published : 18 Aug 2014 07:31 PM
Last Updated : 18 Aug 2014 07:31 PM

இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை திடீர் ரத்து: பிரிவினைவாதத் தலைவர்களை சந்தித்ததால் மத்திய அரசு அதிரடி

இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சு வார்த்தை திங்கள்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களை சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து பேச்சு வார்த்தையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றபோது சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அதன்படி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீ பும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.

அப்போது இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அழைப்பு விடுத் தார். இந்தியாவுடனான உறவை புதுப்பிக்க விரும்புவதாகவும் ஷெரீப் பேட்டியளித்தார்.

இதைத் தொடர்ந்து முதல்கட்ட நடவடிக்கையாக இந்திய, பாகிஸ் தான் வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லா மாபாதில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது.

தடம் மாறிய பாகிஸ்தான் தூதர்

இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டமாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜம்மு-காஷ்மீர் ஜனநாயக சுதந்திர கட்சி என்ற அமைப்பின் தலைவர் ஷபீர் அகமது ஷா என்பவருடன் திங்கள்கிழமை அவர் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து ஹூரியத் மாநாட்டு தலைவர் மிர்வாஸ் உமர் பாரூக், இதர பிரிவினைவாதத் தலைவர்கள் சையது அலி ஷா கிலானி, முகமது யாசின் மாலிக் உள்ளிட்டோரை செவ்வாய்க் கிழமை சந்தித்துப் பேச திட்ட மிட்டிருந்தார்.

இந்தியா எச்சரிக்கை

இந்த விவகாரத்தால் மத்திய அரசு கடும் அதிருப்தி அடைந்தது. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங், பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை திங்கள்கிழமை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

“நீங்கள் யாருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். பிரிவினைவாதிகளுடனா அல்லது இந்திய அரசுடனா என் பதை தீர்மானித்துவிட்டு பிறகு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்” என்று சுஜாதா சிங் எச்சரித்தார்.

தொடரும் அத்துமீறல்

இதனிடையே எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதையும் மத்திய அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி நிருபர்களிடம் கூறியபோது, பாகிஸ்தான் ராணுவம் வேண்டு மென்றே எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது என்று குற்றம் சாட்டினார். கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் இதுவரை 48 முறை பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்தத்தை மீறியுள்ளது. திங்கள்கிழமையும் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இந்த காரணங்களால் இருநாட்டு வெளியறவுச் செய லர்கள் நிலையிலான பேச்சு வார்த்தையை மத்திய அரசு திடீரென ரத்து செய்தது.

வெளியுறவுத் துறை அறிக்கை

இதுதொடர்பாக மத்திய வெளி யுறவுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது: பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சி மேற் கொண்டு வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் தூதர்,, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களை சந்தித்துப் பேசுவது சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே இந்திய வெளியுறவுச் செயலரின் ஆகஸ்ட் 25-ம் தேதி இஸ்லாமாபாத் பயணம் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x