கேரளாவில் கணவர் ஓய்வுபெற்ற பிறகு தலைமை செயலர் பதவியை ஏற்றுக்கொண்ட மனைவி!

கணவர் வேணு (இடது) |  மனைவி சாரதா (வலது)
கணவர் வேணு (இடது) | மனைவி சாரதா (வலது)
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கணவன், மனைவி இருவருமே ஐஏஎஸ் அதிகாரிகளாக ஒரே மாநிலத்தில் பணிபுரிந்து வரும் நிகழ்வுகள் நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன. ஆனால் தலைமைச் செயலராக இருந்த கணவர் ஓய்வு பெற்றதும், அவரது மனைவி தலைமைச் செயலராக பொறுப்பேற்றுள்ள நிகழ்வு கேரள மாநிலத்தில் நடந்துள்ளது.

கேரள மாநில அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் மூத்த ஐஏஎஸ் அதிகாரி வி.வேணு. இவர் கடந்த மாதம்31-ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.இதையடுத்து அதற்கு அடுத்த நிலையில்இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான வேணுவின் மனைவி சாரதா முரளீதரன்,அடுத்த தலைமைச் செயலராக பொறுப்பேற்றுள்ளார். கேரளாவில் கணவரைத் தொடர்ந்து அவரது மனைவி அரசின் தலைமைச் செயலராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறையாகும்.

சாரதா முரளீதரன் 1990-ம் ஆண்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். முன்னதாக சாரதா முரளீதரன், கேரள மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலராக (திட்டம் மற்றும் பொருளாதார விவகாரம்) பொறுப்பு வகித்து வந்தார்.

இதுகுறித்து திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, “முதன்முறையாக கேரள அரசின் தலைமைச் செயலர் பதவியிலிருந்து பணி ஓய்வு பெற்றுச் செல்லும் கணவர் வேணு, தலைமைச் செயலர் பொறுப்பை மனைவி சாரதா முரளீதரனிடம் ஒப்படைத்துள்ளார். இது ஒரு அரிய நிகழ்வு. இருவருமே 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகள்” என்றார்.

இதுகுறித்து சாரதா முரளீதரன் கூறும்போது, “கணவர் ஓய்வு பெற்ற பிறகு இன்னும் 8 மாதங்கள் அரசு சேவையில் தொடரும் நிலை உள்ளது. எனவே, தற்போது சிறிது கவலையாக இருக்கிறது. நாங்கள் 34 ஆண்டுகளாக அரசு ஊழியர்களாக ஒன்றாகவே பணியாற்றினாம். நான் தனியாக பணியாற்றுவேன் என்று ஒருபோதும் யோசிக்க வில்லை’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in