

பெங்களூர் அரசு காப்பகத்தில், பிரார்த்தனைக்கு முன்பு சாப்பிட்டதற்காக, 13 வயது சிறுவனைக் கடுமையாகத் தாக்கிய பராமரிப்பாளரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரின் வில்சன் கார்டன் பகுதியில் குழந்தைகளை பராமரிக்கும் அரசு காப்பகம் உள்ளது. அதன் பராமரிப்பாளராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், உணவு நேரத்தில் பிரார்த்தனை செய்வதற்கு முன்பாக சாப்பிட்ட காரணத்தால், 13 வயது சிறுவனைக் கடுமையாகத் தாக்கிய பராமரிப்பாளர் ரமேஷை பெங்களூர் போலீஸ் கைது செய்தது.
இது குறித்து போலீஸ் தரப்பு கூறும்போது, "பிரார்த்தனைக்கு முன்பு சாப்பிடத் தொடங்கியதற்காக அந்தச் சிறுவனை ரமேஷ் இரும்புக் குழாயால் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். அத்துடன், காயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. தகவல் அறிந்ததும் காப்பகம் சென்று சிறுவனை மீட்டோம். படுகாயம் அடைந்தச் சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றனர்.
இது குறித்து குழந்தைகள் நல குழுவின் அதிகாரிகள் கூறும்பொது, "நாங்கள் காப்பகத்துக்கு வழக்கமான விசாரணைக்குச் செல்லும்போது, அந்தச் சிறுவன் நிற்க முடியாத அளவுக்கு தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அச்சிறுவன் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரி திவ்யா நாராயணன் பார்வைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என்று தெரிவித்தனர்.
மேலும், "பராமரிப்பாளர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு, குழந்தைகள் நல குழுவின் சார்பில் அறிக்கை மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என்றனர்.