‘சாதிவாரி கணக்கெடுப்பை அரசியல் கருவியாக பயன்படுத்தக் கூடாது’ - ஆர்எஸ்எஸ் கருத்து

சுனில் அம்பேத்கர் | கோப்புப் படம்
சுனில் அம்பேத்கர் | கோப்புப் படம்
Updated on
1 min read

பாலக்காடு: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்று ஆர்எஸ்எஸ் கருத்து தெரிவித்துள்ளது.

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்டம் கேரளாவின் பாலக்காட்டில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரை 3 நாட்கள் நடைபெற்றது. 3-ம் நாள் நிகழ்ச்சியின் நிறைவில் அந்த அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இது நமது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு முக்கியமானது. இது மிகவும் தீவிரமாகக் கையாளப்பட வேண்டும்.

சில சமயங்களில், அரசாங்கத்துக்கு எண்கள் தேவைப்படுகின்றன. அப்போதுதான் அவர்களின் வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்த முடியும். அதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு என்றால், பிரச்சினை இல்லை. கடந்த காலங்களிலும் இது போன்ற கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. ஆனால் அது, அந்த சமூகங்கள் மற்றும் சாதிகளின் நலனைப் பற்றி பேசுவதாக இருக்க வேண்டும். அது ஓர் அரசியல் கருவியாகவோ அல்லது தேர்தல் பிரச்சாரத்துக்காகவோ பயன்படுத்தப்படக் கூடாது" என்று தெரிவித்தார்.

மத்தியில் ஆளும் பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி உறுதி அளித்திருந்தது. "சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் கொள்கைகளை வகுக்க முடியாது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடி மக்கள், பெண்கள், சிறுபான்மையினர், பொதுப்பிரிவினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் எவ்வாறு கொள்கைகளை வகுக்க முடியும்?" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகளும் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in