Published : 19 Jun 2018 02:25 PM
Last Updated : 19 Jun 2018 02:25 PM

குஜராத் உள்ளாட்சி தேர்தலில் ‘கூவத்தூர்’ - பாஜக குதிரை பேரம்; சொகுசு விடுதியில் காங்கிரஸ் கவுன்சிலர்கள்

குஜராத் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கவுன்சிலர்களை இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதால், காங்கிரஸ் கவுன்சிலர்கள் அண்டை மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சட்டப்பேரவை தேர்தலை மிஞ்சும் வகையில் நடக்கும் குதிரை பேரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளபோதிலும், அங்கு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எதிர்கட்சியான காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து, நகராட்சி, ஊராட்சி என அனைத்திற்கும் மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ் கவுன்சிலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் தலைவர் பதவியை காங்கிரஸ் எளிதாக கைபற்றியது.

குஜராத் உள்ளாட்சி அமைப்பு விதியின்படி, உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருந்தாலும், தலைவர்களுக்கு இரண்டரை ஆண்டுகாலம் மட்டுமே பதவி. அதன் பிறகு கவுன்சிலர்கள் மீண்டும் கூடி அவர்களில் ஒருவரை புதிதாக தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி, பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் தேர்தல் தற்போது நடந்து வருகிறது.

இந்த முறை எப்படியும் உள்ளாட்சி அமைப்புகளை கைபற்றி விட வேண்டும் எனற எண்ணத்தில் உள்ள ஆளும் கட்சியான பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகிறது. இதனால் முதல்கட்ட தேர்தல் நடந்த நகராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் பாஜக தலைவர் பதவியை கைபற்றியுள்ளது.

அம்ரேலி, பாதா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் காங்கிரஸூக்கு அதிக கவுன்சிலர்கள் இருந்தபோதிலும், அங்கு தலைவர் பதவியை பாஜக கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து உள்ளிட்ட கிராமபுற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்தகட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் பாஜகவிடம் இருந்து தங்கள் கவுன்சிலர்களை காப்பாற்ற காங்கிரஸ் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கவுன்சிலர்கள் அருகில் உள்ள ராஜஸ்தான் மற்றும் யூனியன் பிரதேசமான டாமனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்னர்.

அங்குள்ள சொகுசு விடுதிகளில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் தங்க வைக்கப்பட்டு, கட்சியின் மூத்த நிர்வாகிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை இந்த ஏற்பாடு தொடரும் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தில் ஆட்சியமைக்க எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டதுபோல, கவுன்சிலர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x