Published : 01 Sep 2024 07:55 AM
Last Updated : 01 Sep 2024 07:55 AM
புதுடெல்லி: பணியிட பாலியல் தொந்தரவு குறித்து பெண்கள் புகார் செய்ய மத்திய மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது .
இதுகுறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், Shebox.wcd.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
பணியிடங்களில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் இந்த இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம். அரசு, தனியார் அலுவலகங் களில் பணிபுரிவோர் மட்டுமல்லாது அமைப்புசாரா தொழிலாளர்களும் இதில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்த பின்பு அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி கூறும்போது, “கடந்த 2013-ம் ஆண்டில் இயற்றப்பட்ட பணியிட பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் தீர்வு) சட்டத்தின் கீழ் 2017-ம்ஆண்டு ஒரு இணையதளம் தொடங்கப்பட்டது. இதன் மேம்படுத்தப்பட்ட இணையதளம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்படும் புகார்களுக்கு தீர்வு காண 2 வகை குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.
தனியார் நிறுவன ஊழியர்களின் புகார்களுக்கு தீர்வு காண உள்விவகார குழுவும் அரசு ஊழியர்களின் புகார்களுக்கு தீர்வு காண உள்ளூர் குழுவும் அமைக்கப்படும். இதன் தலைவராக மாவட்ட ஆட்சியர் இருப்பார்.
புகார் தெரிவித்த பெண்களின்பெயர் ரகசியமாக வைக்கப்படும். இதன் அடிப்படையில் அந்த குழுக்கள் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்படும். இதுகுறித்து புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT