

விஜயவாடா: ஆந்திராவில் கன மழைக்கு 7 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவில் கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
கனமழையால் விஜயவாடாவில் தாழ்வான பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. விஜயவாடா கனகதுர்கை அம்மன் கோயிலுக்கு செல்லும் பாதையில் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று குண்டூர், விஜயவாடா பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயவாடா முகல்ராஜபுரம் பகுதியில் சுன்னபுபட்டி கிராமத்தில் நேற்று அதிகாலைநிலச்சரிவு ஏற்பட்டதில் மூன்று குடிசைகள் தரைமட்டமாகின. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
குண்டூர் மாவட்டம் உப்பலபாடு எனும் இடத்தில் தனியார் பள்ளி ஊழியர் ராகவேந்திராவின் கார் கால்வாயில் விழுந்தது. இதில் ராகவேந்திரா மற்றும் அவருடன் பயணித்த 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஆந்திராவில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டார். மழை காரணமாக நேற்று கர்னூல் செல்ல வேண்டிய பயணத்தை சந்திரபாபு ரத்து செய்தார்.