

மும்பையி கோட்டை பகுதியிலுள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து ஊடகங்கள் தரப்பில், ”மும்பை கோட்டை பகுதியில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ்ஸில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இந்தத் தீவிபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்தினால் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் தீயணைப்பு வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
மும்பை அதிகாரி ஒருவர் கூறும்போது, "தீயை அணைக்க மொத்தம் 16 வீரர்கள் செயல்பட்டனர். தீ விபத்துக்குள்ளான கட்டிடம் மிகவும் பழைய கட்டிடம். அடிதளம் சரிந்துள்ளதால் அங்கு யாரும் வசிக்கவில்லை” என்றார்.
நிலைமை தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாகவும், தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மும்பை போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில் மும்பையில் ஏற்பட்ட இரண்டாவது தீ விபத்து இதுவாகும்