Last Updated : 05 Jun, 2018 04:20 PM

 

Published : 05 Jun 2018 04:20 PM
Last Updated : 05 Jun 2018 04:20 PM

‘அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து; மனித உரிமைகள் மீது தாக்குதல்’: பாஜக அரசு குறித்து கோவா கிறிஸ்தவ பிஷப் எச்சரிக்கை

 

நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் இருக்கிறது, ஏராளமான மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், மனித உரிமைகளும், ஜனநாயகமும் ஆபத்தில் இருக்கிறது என்று கோவா-டாமன் கிறிஸ்தவ பிஷப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிறிஸ்துவர்களின் பேஸ்டோரல் ஆண்டு ஜுன்1-ம் தேதி தொடங்கியதையடுத்து, கோவா-டாமன் கிறிஸ்தவ பிஷப் பிலிப் நெரி பெராரியோ அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் பாஜக ஆட்சி குறித்து மறைமுகம் கிறிஸ்துவ மக்களுக்கும் எச்சரித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

2019-ம் ஆண்டு பொதுத்தேர்தல் வருவதால், மக்கள் அனைவரும் அரசியலமைப்புச்சட்டத்தை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பாதுகாக்கும் முறையையும் அறிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நம்நாட்டில் மனித உரிமைகளும், ஜனநாயகமும் மிகுந்த தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால், பெரும்பாலான மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகிறார்கள்.

சமீப காலமாக நம் நாட்டில் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. நம்நாடு வேற்றுமையிலும் ஒற்றுமை உள்ள நாடு. ஆனால், ஒரேமாதிரியான தன்மையை புகுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதாவது நாம் என்ன சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும், எப்படி வாழ வேண்டும், வழிபாடு செய்யவேண்டும் என்று வலிந்து திணிக்கப்படுகிறது. ஒரே கலாச்சாரம் மக்களிடம் வலியுறுத்தப்படுகிறது.

மனித உரிமைகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. ஜனநாயகம் மிகுந்த ஆபத்தில் சிக்கி இருக்கிறது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, பல்வேறு சிறுபான்மையினரும் தங்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுடன் எதிர்நோக்குகின்றனர். நம் நாட்டில் சட்டத்துக்கான மதிப்பு குறைந்து வருகிறது.

நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் ஆண்டுக்கணக்கில் வாழ்ந்த மக்கள் அவர்கள் சொந்த மண்ணில் இருந்து கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தப்படுகிறார்கள். மக்கள் சொந்தமாகக் கட்டிய வீடுகள் அவர்களிடம் இருந்து பிடுங்கப்படுகின்றன. புனித போப் பிரான்சிஸ் வளர்ச்சியைப் பற்றி கூறுகையில், வளர்ச்சியின் முதல் பலிகடா நாட்டின் முதல் ஏழைக் குடிமகன் என்று கூறினார். அதுதான் இங்கு நடக்கிறது.

ஏழைமக்களின் உரிமைகளை எளிதாகப் பறித்து காலில் போட்டு மிதித்து விடுவது எளிது. ஏனென்றால், அவ்வாறு நடக்கும் போது எதிர்ப்புக் குரல் உயர்த்துவோர் மிகச்சிலர்தான். இந்த நேரத்தில் கிறிஸ்தவர்கள் அனைவரும் அரசியல், சமூக அவலங்களைத் தீர்க்க பங்கெடுக்க வேண்டும். நம்பிக்கையுடன் அரசியலில் உங்களின் பங்களிப்பை ஆற்ற வேண்டும்.

நாட்டில் குழந்தைகளுக்கு போதுமான அளவுக்குச் சத்தான உணவுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச மக்கள் தொகையில், 30 சதவீத சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இந்தியாவில் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏன் இந்த அதீதமான ஏழ்மை நம்நாட்டில் நிலவுகிறது. நாட்டில் 73 சதவீத வளங்களை வெறும் 10 சதவீத மக்கள் கட்டுப்படுத்துகிறார்கள், அனுபவிக்கிறார்கள். நாட்டில் உள்ள எஞ்சியுள்ள மற்ற மக்கள் கடும் வறுமையில் உழல்கிறார்கள். இதுதான் சமூகநீதியா. இவ்வாறு ஆர்ச்பிஷப் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் இதேப்போன்று டெல்லி ஆர்ச்பிஷப் அனில் குட்டோ கிறிஸ்தவ மக்களுக்கும் கடிதம் எழுதினார். அதில் நாட்டில் அச்சுறுத்தலான, அசாத்திய அரசியல் சூழல் நிலவுகிறது. நாட்டின் ஜனநாயக மதிப்புகளுக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் அச்சுறுத்தல் நிலவுகிறது என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x