Published : 30 Aug 2024 05:51 AM
Last Updated : 30 Aug 2024 05:51 AM
புதுடெல்லி: ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 47-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது:
இந்த நிகழ்வின் தொடக்கமாக, தொலைநோக்கு பார்வை கொண்ட நமது பிரதமர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதற்கு அன்புடன் வாழ்த்துவோம். இது, நாட்டின் ஸ்திரத்தன்மை, துடிப்பான ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இந்த தேர்தல் முடிவு உலகளவில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்த உதவியுள்ளது. அதுமட்டுமின்றி, நமது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் பரவலாக திறந்துவிட்டுள்ளது.
நாம் இப்போது அபரிமிதமான நம்பிக்கையும், அக்கறையும் கொண்ட காலங்களில் வாழ்கிறோம். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு, கணினி. ரோபாட்டிக்ஸ் உள்ளிட்டவை எதிர்காலத்தை வடிவமைத்தில் முக்கிய பங்கு வகிக்கதொடங்கியுள்ளன. அதேவேளையில், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் மோதல்களையும் உலகம் எதிர்கொண்டு வருகிறது.
இதுபோன்ற நிச்சயமற்ற சூழல்களுக்கிடையிலும் அடுத்த 25ஆண்டு கால இலக்கான வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி இந்தியா வீறுநடை போடும் என்பதை மட்டும் உறுதியாக கூறலாம்.
உலகளாவிய பொருளாதார ரயிலில் இந்தியா ஒரு கேரேஜாக இல்லாமல் ஒப்பிடமுடியாத மக்கள் தொகை, ஒப்பீட்டளவில் இலகுவான கடன், விரைவான வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய வளர்ச்சி இன்ஜினாக இந்தியா உள்ளது. இவ்வாறு முகேஷ் அம்பானி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT