Published : 29 Aug 2024 05:25 AM
Last Updated : 29 Aug 2024 05:25 AM

அசாமில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து கட்டாயப்பதிவு சட்ட மசோதா தாக்கல்

குவஹாதி: அசாம் சட்டப்பேரவையில், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற சட்ட மசோதவை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு நேற்று தாக்கல் செய்தது.

இந்த சட்ட மசோதா பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அமளியில்ஈடுபட்டன. இவற்றுக்கு மத்தியில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக முதல்வர்ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், ‘‘இதுவரை முஸ்லிம் தனிநபர் சட்டப்படி திருமணம் என்பது ஆணுக்கும் பெண் ணுக்கும் இடையிலான ஒப்பந்த மாகும். ஆகவே முஸ்லிம் மதகுருமார்களை சாட்சியாக வைத்து அவர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் உள்ளது.

இத்தகைய சூழலில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானால் இனிமேல் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து ஆகியவை கட்டாயமாகப் பதிவு செய்யப்படவேண்டும். இந்த சட்டப்படி 18 வயதுக்குட்பட்ட பெண், 21 வயதுக்கு உட்பட்ட ஆண் திருமணம் செய்து கொள்ள முடியாது. இதன்மூலம் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்படும்’’ என்றார்.

பொது சிவில் சட்டத்தை நாட்டில் முதன்முறையாக அமல்படுத்தியது உத்தராகண்ட் மாநிலமாகும். அதனைத்தொடர்ந்து தற்போது அசாம் அதே வகையிலான சட்டத்தைப் பிறப்பிக்கவிருக்கிறது. அதற்கு திருமணம் தொடர்பாக இதற்கு முந்தைய சட்டம் ரத்துசெய்யப்படுவதற்கான மசோதாசட்டப் பேரவையில் தாக்கல்செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். இதையொட்டி இந்தபுதிய சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்நிலையில், முஸ்லிம் திருமணம், விவாகரத்து கட்டாயப்பதிவு சட்ட மசோதாவானது முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வகையில், தேர்தல் நடைபெறும் ஆண்டில் வாக்காளர்களைப் பிளவுபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x