

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சன்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் பெயரில் புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளன. ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஆட்சியை வலுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கான நன்மைகளை அவர்களின் வீட்டு வாசலுக்கே இவை கொண்டு செல்லும். லடாக் மக்களின் வளர்ச்சிக்காக ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது.இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.
லடாக்கில் தற்போது லே, கார்கில் ஆகிய 2 மாவட்டங்கள் உள்ளன. கடந்த 2019 வரை ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக லடாக் இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்துசெய்தபோது அதனை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
உலகின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக லடாக் விளங்குகிறது. மோட்டார் சைக்கிள்பயணிகளுக்கான பயண இலக்காகவும் இது உள்ளது. உலகின் மிகஉயரமான சாலைகள் வழியே ஆயிரக்கணக்கானோர் மோட்டார்சைக்கிளில் இங்குள்ள மலைகளுக்கு சென்று வருகின்றனர். இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் லடாக் உள்ளது.